திருப்பரங்குன்றம் தீப வழக்கு 2 நாட்களில் விசாரணைக்கு எடுக்கப்படும் - உச்சநீதிமன்றம் தகவல்
மதுரை, 5 டிசம்பர் (ஹி.ச.) கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். அந்த
திருப்பரங்குன்றம் தீப வழக்கு 2 நாட்களில் விசாரணைக்கு எடுக்கப்படும் - உச்சநீதிமன்றம் தகவல்


மதுரை, 5 டிசம்பர் (ஹி.ச.)

கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருநாளான நேற்று முன்தினம் (டிச 03), திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்று இந்து அமைப்பினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக நேற்று (04.12.2025) இரவு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

அதில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக விரைவாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (டிச 05) வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அப்போது தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு நடைமுறைப்படி 2 நாட்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த மனுவானது வரும் திங்கட்கிழமை (டிச 08) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான பட்டியல் நாளை (டிச 06) மாலை அதிகாரப்பூர்வமாக உச்சநீதிமன்றத்தால் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b