வேலூர் அருகே மூன்று யானைகள் எலும்புக்கூடாக கண்டெடுப்பு
வேலூர், 5 டிசம்பர் (ஹி.ச.) வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் மலை சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த மலையில் அமைந்துள்ள தண்ணீர் ஓடையின் அருகே மூன்று யானைகள் இறந்த நிலையில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், பேரணாம்பட்டு வனத
Elephants


வேலூர், 5 டிசம்பர் (ஹி.ச.)

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் மலை சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த மலையில் அமைந்துள்ள தண்ணீர் ஓடையின் அருகே மூன்று யானைகள் இறந்த நிலையில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், பேரணாம்பட்டு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு சென்ற வனத்துறையினர், நீண்ட நாட்களாக அழுகிய நிலையில் எலும்புக்கூடாக மாறியிருந்த யானைகளின் உடல்களை கண்டறிந்தனர்.

இந்த யானைகளின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கால்நடை மருத்துவ குழுவின் விசாரணை அறிக்கைக்கு பிறகே யானைகள் எவ்வாறு இறந்தன? என்பது தெளிவாக தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேரணாம்பட்டு வனப்பகுதியில் சமீபத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு யானைகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில், மேலும் மூன்று யானைகள் மர்மமாக உயிரிழந்துள்ள சம்பவம் வன ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் யானை உயிரிழப்புகள் தொடர்பாக வனத்துறை தீவிர கண்காணிப்பும், விசாரணையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த தொடர் சம்பவம், வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

யானைகள் எவ்வாறு உயிரிழந்தன? என்பது தற்போது தெளிவாக தெரியவில்லை. உடல்கள் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததால் மரண நேரம் மற்றும் காரணத்தை உடனடியாக கூற முடியாது. இதற்காக கால்நடை மருத்துவ குழு விரிவான பரிசோதனை நடத்துகிறது.

விஷப்பொருள் கலந்த நீர் அல்லது உணவு, மின் வேலி, இயற்கை காரணங்கள் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த பகுதியில் யானைகள் மரணம் அதிகரித்துள்ளதால், வனத்துறை சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைத்து ரோந்து நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் அல்லது நில உரிமையாளர்களின் தவறான செயல்கள் காரணமாக சம்பவம் நடந்திருக்கிறதா? என்பதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்படும்.

வனவிலங்குகள் பாதுகாப்பில் எந்த அலட்சியத்திற்கும் இடமளிக்க மாட்டோம் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN