Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.)
குழந்தைத் திருமணமே இல்லை என்ற நிலையை ஒராண்டுக்குள் உருவாக்க அதிக ஆபத்துள்ள 5 மாவட்டங்களை தமிழ்நாடு இலக்காகக் கொள்கிறது
குழந்தைத் திருமணங்களே நடைபெறாத நாடாக 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற இலக்கை நோக்கி ஓர் ஆற்றல்மிக்க புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ரன் (JRC) அமைப்பு செயல்பட தொடங்கியுள்ளது.
இந்த அமைப்பு அடுத்த ஓர் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கிராமங்களைக் குழந்தைத் திருமணங்களே இல்லாத கிராமங்களாக மாற்றுவதற்கான தீவிர இயக்கத்தை அறிவித்துள்ளது. தேசியக் குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு v (2019-21) இன் கீழ் தேசிய அளவில் அதிகமாகக் குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தீவிர நடவடிக்கைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசின் பால் விவா முக்த் பாரத் முன்னெடுப்பின் முதலாமாண்டு நிறைவை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாடு தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 100 நாள் செயல் திட்டத்தை அரசு தொடங்கியது.
நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனப் பங்காளர்களைக் கொண்ட 'ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ரன்' அமைப்பு மாநிலத்தில் 6 பங்காளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
கடந்த ஓர் ஆண்டில் மட்டும் இந்தக் கூட்டமைப்பு தமிழ்நாட்டில் 1992 குழந்தைத் திருமணங்களைத் தடுத்தது. குழந்தைகளின் பாதுகாப்பிற்காகப் பாடுபடும் சிவில் சமூக அமைப்புகளின் மிகப்பெரிய கூட்டமைப்பில் ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ரன் அமைப்பு உள்ளது.
மேலும் அதன் பங்காளர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் கடந்த ஓர் ஆண்டில் நாடு தழுவிய அளவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களை இந்தக் கூட்டமைப்பு தடுத்து நிறுத்தியுள்ளது.
தேசியக் குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பின்படி (NFHS V) தமிழ்நாட்டில் குழந்தைத் திருமண நிகழ்வுகள் 12.8 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 23.3 சதவீதத்தை விடக் குறைவாக இருந்தாலும் வெவ்வேறு மாவட்டங்களில் இந்த நிலைமையில் ஏற்றத்தாழ்வு உள்ளது.
உதாரணமாகச் சேலத்தில் குழந்தைத் திருமண நிகழ்வுகள் 23.7 சதவீதமாக உள்ளது. அதே வேளையில் திண்டுக்கல். கிருஷ்ணகிரி, பெரம்பலூர் போன்ற பிற மாவட்டங்களிலும் குழந்தைத் திருமண நிகழ்வுகள் அதிகம் நடப்பதாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் இங்கெல்லாம் பாதிப்பு 20 சதவீதம் அல்லது அதற்கு மேலும் உள்ளது.
அரசின் முன்னெடுப்புக்கு முழு ஆதரவை வழங்கி JRC-யின் வரவிருக்கும் ஆண்டிற்கான திட்ட வரைபடத்தைப் பகிர்ந்து கொண்ட ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ரன் அமைப்பின் நிறுவனர் புவன் ரிபு கூறுகையில்,
குழந்தைத் திருமணங்களே நடைபெறாத இந்தியாவை உருவாக்குவதில் சமூகக் குழுக்கள், மதத் தலைவர்கள், பஞ்சாயத்துகள் மற்றும் குடிமக்களின் பங்கு முக்கியமானது.
அரசின் பால் விவா முக்த் பாரத் என்ற பிரச்சாரம் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான இந்தக் குற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எங்கள் கூட்டு முயற்சியின் வெளிப்பாடாகவும் இது அமைகிறது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன அல்லது தடுக்கப்பட்டன.
சமூகம் ஒன்று சேரும்போது மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதை இது காட்டுகிறது. அடுத்த ஆண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான எதிர்காலமும் கிடைக்கும் வகையில் ஒரு லட்சம் கிராமங்களைக் குழந்தைத் திருமணம் இல்லாதவைகளாக மாற்றுவோம் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். இந்தியா ஒரு விக்ஸித் பாரத் என்ற பெரிய தொலைநோக்கை நோக்கி நகரும்போது இந்த உத்வேகம் முக்கியமானது ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாடு முழுவதும் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காக 3P மாதிரியைப் பயன்படுத்தி பாதுகாப்பு. தடுப்பு மற்றும் வழக்குத் தொடர்தல் ஆகியவற்றை ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ரன் மேற்கொண்டு வருகிறது. ஏப்ரல் 1, 2023 முதல் நவம்பர் 14, 2025 வரை 4,35,205 குழந்தைத் திருமணங்களைத் தடுத்துள்ளது.
சமுதாயங்கள். பள்ளிகள், மதத் தலைவர்கள் மற்றும் திருமண சேவை வழங்குநர்களுக்கு இடையில் குழந்தைத் திருமணச் சட்டங்கள் குறித்த சட்ட நடவடிக்கைகள் மற்றும் பரவலான விழிப்புணர்வு மூலம் இந்தியாவில் குழந்தைத் திருமணம் எவ்வாறு பார்க்கப்படுகிறது மற்றும் சகித்துக்கொள்ளப்படுகிறது என்பதில் இந்தக் கூட்டமைப்பு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் 'விக்ஷித் பாரத்' என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் பால் விவா முக்த் பாரத் திட்டத்தின் ஓராண்டு காலம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 'பால் விவா முக்த் பாரத்' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக '100 நாள் தீவிர பிரச்சாரத் திட்டத்தை' அறிமுகப்படுத்தியுள்ளது.
100 நாள் செயல் திட்டம் மார்ச் 8, 2026 அன்று சர்வதேச மகளிர் தினத்தன்று முடிவடைகிறது. மாநில, மாவட்ட மற்றும் கிராம மட்டங்களில் கொண்டுசெல்லப்படும் இந்தத் திட்டம் 3 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும். மதம் சார்ந்த இடங்களான கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள், திருமண மண்டபங்கள் மற்றும் இசைக்குழு உள்ளிட்ட திருமணம் தொடர்பான சேவையில் ஈடுபடுபவர்கள்,இரண்டாவது கட்டத்தில் கவனத்தில் கொள்ளப்படுவார்கள்.
மேலும் சமூக அளவிலான ஈடுபாட்டையும் உரிமையையும் வலுப்படுத்த கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி வார்டுகள் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இந்த அறிவிப்புக்கு ஆதரவளிக்கும் விதமாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை மற்றும் உயர்கல்வித் துறை ஆகியவற்றின் அனைத்து களப்பணியாளர்களையும் அதிகாரிகளையும் இந்த பிரச்சாரத்தில் தீவிரமாகப் பங்கேற்று தாக்கத்தை ஏற்படுத்துமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b