Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.)
வரும் டிசம்பர் 29-ஆம் தேதி, திங்கட்கிழமை, காலை 9 மணி முதல், மாலை 3.30 மணி வரை, சென்னை, செயின்ட் தாமஸ் மலையில் உள்ள புனித பசிலிக்கா வில் அனைத்து பிரிவு கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து பிரமாண்டமான மாநாடு
நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பிரிவு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த தேவ ஊழியர்கள், போதகர்கள், ஆயர்கள், பேராயர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் முதல் முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த இந்த மாநாட்டின் ஆலோசனை கூட்டத்தில் தருமபுரி பேராயத்தின் ஆயரும், ’தாபோர் (TABOR) உச்சி மாநாடு 2025’ மாநாட்டின் தமிழக பணிக்குழுவின் தலைவருமான 'பிஷப் லாரன்ஸ் பயஸ்' தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ‘தாபோர் உச்சி மாநாடு 2025’ பணிக்குழு தலைவர் பிஷப் லாரன்ஸ் பயஸ் கூறுகையில்,
அனைத்து பிரிவு கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து ஆண்டவரின் சிறப்பு அபிஷேகத்தையும், வல்லமையையும், பரிசுத்த ஆவியையும் பெறுவதற்கான மாபெரும் கூட்டம் நவம்பர் 29 ஆம் தேதி, செயின்ட் தாமஸ் மலை மீது நடைபெற உள்ளது.
ஒரே எண்ணத்தை கொண்ட அனைவரும் ஒன்று கூடி, நல்ல எண்ணத்தை பெற்று தருவதோடு, தேசத்திற்கு ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்ய வேண்டும், என்பதே இந்த கூட்டத்தின் நோக்கம். இந்த கூட்டம் தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறை. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கூட்டத்தில் அனைத்து பிரிவு கிறிஸ்தவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது சுமார் 15-க்கும் மேற்பட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த திருச்சபையம் இதில் பங்கேற்க உள்ளார்கள்.
கூட்டம் நடக்கும் போது இன்னும் அதிகமானவர்களை எதிர் பார்க்கிறோம்.
இதற்கு முன் மதமாற்ற தடை சட்டம் போடப்பட்ட போது, அனைத்து திருச்சபைகளும் ஒன்றிணைந்தோம். அதன் பிறகு இப்போது தான் மீண்டும் ஒன்றிணைகிறோம்.
மேலும், 2032 ஆம் ஆண்டு இயேசு கிறிஸ்து பிறந்து, உயிர்தெழுந்து 2000 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.
அந்த விழாவுக்கான முன்னோட்டமாகவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. என்றார்.
தற்போது தமிழகத்தில் மதம் ரீதியான சர்ச்சைகள் அதிகரித்து வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,
அது பற்றி கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை,
எங்களை பொறுத்தவரை ஜெபம்...ஜெபம்...தான். அனைவரும் ஒன்று என்று நினைக்கிறோம். பிற மதங்களை பற்றி வெறுப்பாக பேசப்போவதில்லை.
அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும், அனைத்து மதங்களுடனும் நல்லுறவுடன் இருக்க வேண்டும்.
எங்கள் திருச்சபைகளை ஒன்றிணைக்க வேண்டும், என்பது தான் எங்கள் எண்ணம்.
என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J