Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 6 டிசம்பர் (ஹி.ச.)
அம்ரித் பாரத் திட்டம் இந்தியாவின் பல்வேறு ரயில் நிலையங்களை நவீனமயமாக்கி, பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்க உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது.
பயணிகளின் வசதிக்காக, நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், கழிவறைகள், குடிநீர் வசதிகள், விளக்குகள், அறிவிப்புப் பலகைகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்றவை மேம்படுத்தப்படுகின்றன. மேலும், ரயில் நிலையங்களின் அழகியலும், சுற்றுப்புறமும் மேம்படுத்தப்பட்டு, பயணிகளுக்கு ஒரு இனிமையான அனுபவத்தை அளிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த, 2023 ஆக.,ல், நாடு முழுவதும், 508 ரயில்வே ஸ்டேஷன்களில், 'அம்ரித் பாரத்' என்ற திட்டத்தின் கீழ், விரிவாக்கம் செய்யும் பணிகளை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அந்த வகையில் கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் பாரத் திட்டபணிகள் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.
கரூர் ரயில்வே ஸ்டேஷன், 34 கோடி ரூபாய் செலவில், விரிவாக்க பணிகள் தொடங்கின. பின், திட்ட மதிப்பு, 37 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் கார் பார்க்கிங், புதிய கழிப்பிட வசதி, ரயில்வே ஸ்டேஷன் முகப்பு மாற்றம், கேன்டீன், பிளாட் பாரங்களில் இருக்கை வசதி, நகரும் படிக்கட்டுகள், நடை மேம்பாலம், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட பணிகள் முக்கியமானவை.
கரூர் ரயில்வே ஸ்டேஷனில், வரும் மார்ச் மாதத்துக்குள், விரிவாக்க பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், 'அம்ரித் பாரத்' திட்டப்பணிகளை, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இரவு பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b