Enter your Email Address to subscribe to our newsletters

பிரிஸ்பேன், 6 டிசம்பர் (ஹி.ச.)
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 76.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 334 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 138 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் , ஜேக் வெதர்ரல்ட் களமிறங்கினர். இருவரும் நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தனர். தொடக்க விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில் ஹெட் 33 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய லபுசேன் நிலைத்து ஆடினார். ஜேக் வெதர்ரல்ட் , லபுசேன் இருவரும் பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தனர். இருவரும் அரைசதமடித்து அசத்தினர். ஜேக் வெதரால்ட் 72 ரன்களிலும், மார்னஸ் லபுஸ்சேன் 65 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து ஆடி அரைசதமடித்து அசத்தினார் . அவர் 61 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து கிரீன் 45 ரன்களுக்கு வெளியேறினார்.
இறுதியில் 2வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணியை விட ஆஸ்திரேலியா 44 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. அலெக்ஸ் கேரி 46 ரன்களும், மைக்கேல் நெசர் 15 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM