Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.)
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் இந்த ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பஸ், ரெயில் நிலையங்கள், வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் 15 ஆயிரம் போலீசார் உள்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ரெயிலில் செல்லும் பயணிகளின் உடைமைகள் சோதனைக்கு பிறகே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இன்று ரெயில் தண்டவாளம் மற்றும் முக்கிய பாலம் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதே போன்று சென்னை முழுவதும் நேற்றிரவு முதல் வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தனியார் தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி, சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்கி இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM