Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச)
தாயுமானவர் திட்டத்தின் கீழ் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நிதி உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு இன்று
(டிச 06) வழங்கினார்.
விழாவில் சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருதை முதல்வரிடம் 10 ஊராட்சி சிறப்பு அலுவலர்கள் பெற்றனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சமூகம் முன்னேற கல்வி தான் அடிப்படை, அதனால் கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறோம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், சமத்துவ, சமுதாயம் அமைய வேண்டும் என்பது தான் நமது லட்சியம்.
ஆட்சிப்பொறுப்பு என்பது நமது லட்சியங்களை திட்டங்கள் மூலமாக வென்றெடுப்பதற்கான வழி. அதனால் தான் நம் ஆட்சி அமையும் போதெல்லாம், விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்து, வாய்ப்புக்களை உருவாக்கி கொடுத்து அவர்களுக்கு உறுதுணையாக விளங்கி வருகிறோம். மாணவர்கள் பட்டப்படிப்போடு நிறுத்திவிட்டாமல் ஆராய்ச்சி படிப்பையும் படிக்க வேண்டும். ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ளது.
ஆண்டாண்டு காலமாக சமூகத்தில் இருந்த தடைகளை உடைத்து முன்னேறுகிறோம். அடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நமது முன்னேற்றத்துக்கான மைல்கல்களாக அமையும். அரசு திட்டங்களின் பயன் தேவையான நபர்களுக்கு கிடைக்க வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b