சமூக நல்லிணக்க ஊராட்சி விருது வென்ற கலிங்கப்பட்டி - ம.தி.மு.க. எம்.பி துரை வைகோ பெருமிதம்
சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு அரசின் “சமூக நல்லிணக்க ஊராட்சி” விருதை ம.தி.மு.க. நிறுவனர் வைகோவின் சொந்த கிராமமான கலிங்கப்பட்டி வென்றிருக்கிறது. இது குறித்து இன்று (டிச 06) ம.தி.மு.க. எம்.பி. துரைவைகோ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவி
சமூக நல்லிணக்க ஊராட்சி விருது வென்ற கலிங்கப்பட்டி -  ம.தி.மு.க. எம்.பி துரை வைகோ பெருமிதம்


சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசின் “சமூக நல்லிணக்க ஊராட்சி” விருதை ம.தி.மு.க. நிறுவனர் வைகோவின் சொந்த கிராமமான கலிங்கப்பட்டி வென்றிருக்கிறது.

இது குறித்து இன்று (டிச 06) ம.தி.மு.க. எம்.பி. துரைவைகோ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

அனைத்து சாதி, மதத்தைச் சார்ந்த கலிங்கப்பட்டி ஊர் மக்களின் அன்புக்கும் ஒற்றுமைக்கும் கிடைத்த சிறப்பாகவும், மக்கள் விரோதிகள் வைத்த அவதூறுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளியாகவும் விளங்குவதை எண்ணி, முதலில் இறைவனுக்கும் இயற்கைக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நல்ல நேரத்தில், எங்கள் கலிங்கப்பட்டி ஊரின் சமத்துவ சிறப்புகளை எண்ணிப்பார்க்கிறேன்; அதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்கள் இணைந்து வாழும் ஊராட்சியின் தலைநகரான கலிங்கப்பட்டியில், அனைத்து சமூகத்தினருக்கும் ஒரே சமத்துவ மயானம் மட்டுமே உள்ளது.

* ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து சமூக மாணவர்களும் ஒன்றுமையுடன் கல்வி பயின்று வருகின்றனர்.

* எங்கள் கலிங்கப்பட்டி ஊராட்சியில் பட்டியல் இனத்திற்கெதிரான இதுவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எவ்வித வழக்குகளும் பதிவாகியதில்லை.

* தேநீர் கடைகள், உணவகங்களில் அனைத்து சமூகத்தினரும் சமமாக நடத்தப்படுகின்றனர். தனிக் குவளைகள் கிடையாது.

* வெவ்வேறு சமூகத்திற்கிடையே காதல் திருமணங்கள் நடைபெற்ற போதிலும் இணக்கமாக வாழ்கின்றனர். மோதலோ, வழக்குகளோ இல்லை.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைகளில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த தகுதியானவர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

* இந்திய அரசின் சிறந்த முன்னோடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான விருதினை கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் பெற்றுள்ளது. அனைத்து மக்களுக்கும் சிறந்த சிகிச்சையை அது வழங்கி வருகிறது.

* எங்கள் கலிங்கப்பட்டி ஊராட்சியில் பட்டியலின முதல் ஊராட்சித் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். பாலினபேதம் எங்களிடம் இல்லை.

* எங்கள் கலிங்கப்பட்டி ஊராட்சி சமத்துவ மயானத்திற்காக தமிழ்நாடு அரசு விருதை இருமுறை பெற்றுள்ளது.இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ள எங்கள் கலிங்கப்பட்டி ஊராட்சியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு, இயக்கத் தந்தை, தலைவர் வைகோ அவர்களும் நானும் இயன்ற வகையிலெல்லாம் உறுதுணையாக இருந்து வருகிறோம்.

இவ்விருது பெறத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் பெற்றுள்ள எங்கள் கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு “சமூக நல்லிணக்க விருது” மற்றும் ஊக்கத்தொகை கிடைத்திருக்கும் நற்செய்தியைக் கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.கடந்த 60 ஆண்டுகளாக தலைவர் அவர்கள் ஊட்டி வளர்த்த சமத்துவ உணர்வு, எம் மக்களின் இதயங்களில் ஓங்கி வளர்ந்திருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

சமீபகாலமாக நம் இயக்கத்தின் மீதும், தலைவர் மீதும், என் மீதும் சாதிய ரீதியான குற்றச்சாட்டுகளை, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சமூக விரோதி தெரிவித்திருந்த நிலையில், சமூக நல்லிணக்க விருதை எங்கள் கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு வழங்கி, அக்கயவனின் அவதூறுகளுக்கு எல்லாம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களால் தமிழ்நாடு அரசே வைத்துள்ள முற்றுப்புள்ளியாக நான் கருதுகிறேன்.அனைத்து சமூக மக்களின் ஒற்றுமைக்கும் சாதி, மத நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் எங்கள் கலிங்கப்பட்டியின் சிறப்புகளை ஆய்வு செய்து,

கலிங்கப்பட்டியை “சமூக நல்லிணக்க ஊராட்சி”யாகத் தேர்வு செய்து அறிவித்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சகோதரர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்களுக்கும், நேரடி கள ஆய்வில் ஈடுபட்டு உண்மைகளை மக்களிடமிருந்து திரட்டி அரசுக்கு அறிக்கை வழங்கிய துறைசார்ந்த அதிகாரிகளுக்கும், தலைவர் திரு. வைகோ அவர்களின் சார்பிலும் எங்கள் ஊர் மக்களின் சார்பிலும் என் நெஞ்சார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

Hindusthan Samachar / vidya.b