Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 6 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியாவில் மிக முக்கியமான நகராட்சியாக சென்னை மாநகராட்சி இருந்து வருகிறது. சென்னை மாநகராட்சி பொருத்தவரை தொடர்ந்து விரிவடைந்து வருவதாலும், நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருவதாலும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து ஒரு சில புள்ளி விவரங்களின் அடிப்படையில், மாநகராட்சியின் நிலத்தடி நீரும் சரிந்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை குடிநீர் தேவைக்காக சென்னை புறநகர் பகுதியில் உள்ள நீர்நிலைகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி நீர்த்தேக்கம், கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம், புழல் நீர்த்தேக்கம் ஆகியவை சென்னை குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
ஏரிகள் மட்டுமில்லாமல் கடல் நீரை குடிநீராகும் திட்டத்தின் மூலமும் சென்னையில் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து சென்னை புறநகர் பகுதியில் வெள்ள பாதிப்பை தடுப்பதற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் புதிய நீர் தேக்கங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
2035 ஆண்டுக்குள் சென்னையின் குடிநீர் மற்றும் தொழில்துறை நீர் தேவை 34 டி.எம்சியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்போதிலிருந்து நீர் தேக்கங்களை உருவாக்கும் பணியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், குடிநீர் தேவையை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய நீர் தேக்கம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு கோவளம் பகுதி புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் 1.6 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட ஒரு புதிய நீர்த்தேக்கம் கட்டப்பட உள்ளது. சுமார் 471 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோவளம் பகுதியில் இந்த நீர் தேக்கம் கட்டப்பட உள்ளது.
இந்த புதிய நீர்த்தேக்கத்திற்கான நீர் மழை மற்றும் வெள்ள நீரின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி இந்த நீர் தேக்கம் அமைக்கப்பட உள்ளது. பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைக்கு இடையே அரசு நிலத்தில் இந்த நீர்த்தேக்கம் அமைக்க உள்ளது.
நீர்த்தேக்கம் அமைக்கும் பணியில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கோவளம் பகுதியில் உள்ள, தமிழக அரசின் உப்பு கழக நிறுவனத்திற்கு சொந்தமான 4375 ஏக்கர் நிலத்தில் நீர்த்தேக்கம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது போக அரசு இடம் இருக்கும் நிலங்கள் உட்பட 5000 ஏக்கர் நிலத்தில் நீர்த்தேக்கம் அமைய உள்ளது.
கோவளம் பகுதியில் நீர் தேக்கம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை துவங்க, தமிழக நீர்வளத்துறை டெண்டர் கோரி உள்ளது. இதற்கான ஒப்பந்த பணிகள் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு, தமிழக கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி அளித்தது. இதனால் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN