Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் எடுத்த நடவடிக்கைக்கு சங்கிகளை தவிர்த்து ஒட்டுமொத்தமாக ஆன்மிகவாதிகள், இறையன்பர்கள் முழு ஆதரவு தந்திருக்கிறார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது:
அதிமுகவை பொறுத்தவரை , ஜெயலலிதா இருந்தபோது அக்கட்சி எடுக்கும் நிலைப்பாடுகள் அனைத்தும் சுயசிந்தனையோடு எடுக்கப்பட்டவை. ஆனால் தற்போது அக்கட்சியின் நிலைப்பாடு அனைத்தும் டெல்லியில் அமித் ஷா சொல்வதைப் பொறுத்து நடக்கிறது.
அதிமுகவினர் தாங்கள் கொண்ட கொள்கைகள், லட்சியங்கள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டனர். திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் 2014 மற்றும் 2017 ஆகிய அதிமுக ஆட்சி காலக்கட்டத்தில், தீபத்தை இன்னொரு இடத்தில் ஏற்ற அனுமதி மறுத்து அதிமுகவினர் பிரமாணப் பத்திரம் (Affidavit) தாக்கல் செய்தார்கள்.
ஆனால் இன்று அதனை மறந்துவிட்டு இரண்டாம் இடத்தில் தீபமேற்ற அரசு முன்வர வேண்டும் என அறிக்கை விடுவது போலித்தனமானது.
திமுக அரசு சட்டத்தைக் காக்கும், மக்களுக்கான அரசு. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் எடுத்த நடவடிக்கைக்கு சங்கிகளை தவிர்த்து ஒட்டுமொத்தமாக ஆன்மிகவாதிகள், இறையன்பர்கள் முழு ஆதரவு தந்திருக்கிறார்கள். இது மக்களாட்சி, மக்களுக்கான ஆட்சி. முன்னர் இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை திமுக அரசு பின்பற்றுகிறது.
மரத்துக்கு மரம் தாவும் குரங்கு அல்ல நாங்கள். இரு மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்குகின்ற சூழலை எதிர்பார்த்தார்கள். அது நடக்கவில்லை. அது நடக்கவிடாமல் சக்கர வியூகத்தை அமைத்தவர் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், பிரிவினை என்பது எந்நாளும் எடுபடாது.
பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN