நெல்லையில் அல்வா கடைகளுக்கு சீல் - போலியான பெயரை பயன்படுத்தியதால் அதிகாரிகள் அதிரடி!
நெல்லை, 6 டிசம்பர் (ஹி.ச.) கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்கு சென்று விட்டு, தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆகிய இடங்களுக
Nellai Halwa


நெல்லை, 6 டிசம்பர் (ஹி.ச.)

கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்கு சென்று விட்டு, தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆகிய இடங்களுக்கு தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

அந்த வகையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெல்லைக்கு வருகை தந்து நெல்லைப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நெல்லையின் பிரபலமான அல்வா வகைகளை வாங்க கடைகளில் குவிகின்றனர். இந்நிலையில், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், போலி நிறுவனங்களின் பெயர்களில் அல்வா விற்பனை செய்யப்படுவதாக நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்துள்ளன.

அதன்பேரில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நெல்லை டவுன் ரத வீதிகளில் செயல்பட்டு வந்த பிரபல அல்வா கடையின் பெயரை போலியாக பயன்படுத்தி அல்வா விற்பனையில் ஈடுபட்ட மூன்று கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும் நெல்லை சந்திப்பு பகுதியில் அதே நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி அல்வா விற்பனை பணியில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து நெல்லை சந்திப்பிலும் இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அல்வா உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலும் அதிரடி ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் போலி பெயர்களை பயன்படுத்தி தயாரித்து வைத்திருந்த சுமார் 1,000 கிலோ அல்வாவை பறிமுதல் செய்தனர்.

தரமான முறையில் அல்வா தயார் செய்யப்பட்டுள்ள சூழலில், அல்வா விற்பனை கவர்களில் பயன்படுத்தப்பட்டிருந்த போலி நிறுவனங்களின் பெயரை நீக்கிவிட்டு பிரமான பத்திரம் கொடுத்த பின்னர் அந்த அல்வாக்களை விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

நெல்லை மாநகர பகுதிகளில் அல்வா விற்பனை மோசடி குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவத்தால் மிகுந்த பரபரப்பு நிலவியது.

Hindusthan Samachar / ANANDHAN