Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 6 டிசம்பர் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில், பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இடையில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி இந்த பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் மற்றும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் (16) இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பதினொன்றாம் வகுப்பு மாணவருக்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாணவரின் பெற்றோர், மாணவரை கும்பகோணம் அரசு தலைமை மருத்துமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், மாணவர்கள் மைனர் என்பதால் இருவரது பெற்றோரையும் வரவழைத்து சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இரு மாணவர்களும் வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி மீண்டும் இரண்டு மாணவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் (டிச.4) வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்தவுடன் 10-க்கும் மேற்பட்ட பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே காத்திருந்தனர்.
அப்போது சிறப்பு வகுப்பு முடிந்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் கோயில் அருகே வந்தபோது அங்கு மறைந்திருந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள், ரப்பர் கட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதில், மாணவர் பலத்த காயமடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பெற்றோர் மாணவரை மீட்டு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரை தாக்கிய 15 பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். இதனையடுத்து, தஞ்சாவூரில் உள்ள இளஞ்சிறார் நீதிகுழும நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN