Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு திசை காற்றின் ஊடுருவலால், டெல்டா, தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் இம்மாதத்தில் பருவமழை எப்படி இருக்கும் என்ன மாதிரியான மழை நிகழ்வுகள் உருவாகும் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
வருகிற 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை கிழக்கு திசை காற்றினால் தமிழ்நாட்டில் மீண்டும் மழைக்கான சூழல் ஆரம்பிக்கிறது. கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து கடல் சார்ந்த அலைவுகள் சாதகமாக அமைவதால், வருகிற 15-ந்தேதிக்கு பிறகு அடுத்தடுத்த மழை நிகழ்வுகள் உருவாகி பருவமழை தீவிரம் அடைவதற்கான சூழல் அதிகம் இருக்கிறது.
அதன்படி, 15-ந் தேதிக்கு பின் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி டெல்டா, தென்மாவட்டங்களிலும், 20-ந்தேதி அடுத்த தாழ்வுப்பகுதி உருவாகி சென்னை-கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பை கொடுக்கும். இதனையடுத்து வடகிழக்கு பருவமழை காலத்தின் 3-வது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23-ந்தேதிக்கு பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது.
இது சமீபத்தில் கடந்து சென்ற ‘தித்வா' புயலை போல நல்ல மழையை கொடுக்கக் கூடிய புயல் சின்னமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு பருவமழையை பொறுத்தவரையில், ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM