மூத்த குடிமக்களுக்கான தமிழக அரசின் ராமேசுவரம் - காசி ஆன்மீகப் பயணத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்
சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.) இந்து சமய அறநிலையத்துறையின் 2025-26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், ராமேஸ்வரம், காசி ஆன்மீக பயணத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 602 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த ஆன்மீ
மூத்த குடிமக்களுக்கான தமிழக அரசின் ராமேசுவரம் - காசி ஆன்மீகப் பயணத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று  தொடங்கி வைத்தார்


மூத்த குடிமக்களுக்கான தமிழக அரசின் ராமேசுவரம் - காசி ஆன்மீகப் பயணத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று  தொடங்கி வைத்தார்


சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.)

இந்து சமய அறநிலையத்துறையின் 2025-26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், ராமேஸ்வரம், காசி ஆன்மீக பயணத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 602 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இந்த ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்கும் 602 மூத்த குடிமக்களுக்கு பயண வழிப்பைகளை வழங்கி, ஆன்மீகப் பயணத்தை சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (டிச 06) தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

ராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணத்தில் 602 பேர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் மூலம் பயணிக்கின்றனர். இவர்களுடன் துறை சார்ந்த அலுவலர்கள், இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள் உடன் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த பயணத்தில் ஒரு பக்தருக்கு தலா 27,500 ரூபாய் செலவாகிறது. இதுவரை மொத்தமாக 9.94 கோடி ரூபாய் ஆன்மீக பயணத்திற்காக மட்டும், அரசு மானியமாக வழங்கி உள்ளது. இதுவரை ஆன்மீகப் பயணத்தின் மூலம் 60 வயதை கடந்த 11,353 பத்தர்கள் பயனடைந்துள்ளனர்.

பக்தியை வைத்து பகையை வளர்க்கக் கூடாது. சமாதானம் என்பது தான் இறைக் கொள்கை, சனாதானம் என்பது அல்ல இறைக் கொள்கை. வடக்கிலே இதுபோன்ற சூழல்களை ஏற்படுத்தி அரசியல் மாற்றத்தை உருவாக்கியது போல் தமிழ்நாட்டில் உருவாக்கலாம் என்று நினைக்கிறார்கள். இது ராமானுஜர் வாழ்ந்த மண், எல்லோருக்கும் எல்லாமுமான மண். திமுக ஆட்சியில் பிரிவினை என்பது என்னாலும் ஏற்படாது. பிரிவினை சக்திகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.

மரத்திற்கு மரம் தாவும் குரங்குகள் அல்ல நாங்கள். சிங்கத்தின் கர்ஜனையோடு முதல்வருடன் பயணிப்பவர்கள். அண்ணாமலை நினைத்தது நடக்கவில்லை. இரு மதங்களுக்கு இடையே மோதல்களை ஏற்படுத்தலாம் என்று எண்ணினார்கள், அது நடக்கவில்லை. இதனை நடக்க விடாமல் சக்கர வியூகத்தை உருவாக்கியவர் முதல்வர்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் 1920ஆம் ஆண்டு ஆரம்பித்தது. 2017ஆம் ஆண்டு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு 100 ஆண்டுகளாக ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

திமுக அரசின் சட்டத்தை மதிக்கக்கூடிய அரசு பக்தர்களின் நலம் காக்கும் அரசு. அந்த வகையில், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு என்ன உத்தரவை வழங்கி உள்ளதோ, அதே உத்தரவை செயல்படுத்துகிற அரசாக திமுக அரசு திகழ்கிறது. இதனை உலகத்திற்கே குடமுழுக்கு நாள் குறித்து கொடுக்கக்கூடிய பிச்சை குருக்கள், செல்வம் பட்டரும், ஆன்மீகவாதிகள், இறையன்பர்கள் என அனைவரும் ஆதரித்துள்ளனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டப்படி போராட்டம் நடத்தி மக்களின் ஒற்றுமையை முதலமைச்சர் நிலை நாட்டுவார்.

அதிமுக ஜெயலலிதா இருந்த போது அந்தக் கட்சி சுய சிந்தனையோடு அனைத்து நிலைப்பாடுகளையும் எடுத்து வந்தது.

ஆனால், தற்போது டெல்லியில் அமித்ஷாவின் நிலைபாடுகளைதான் அதிமுக தற்போது எடுத்து வருகிறது. அதிமுக கொண்ட கொள்கைகள் மற்றும் லட்சியங்களை காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு திருப்பரங்குன்றம் தீப விவகாரம் ஒரு எடுத்துக்காட்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b