ஆன்லைன் விளையாட்டால் நேர்ந்த துயரம் - பணத்தை இழந்த இளம்பெண் விபரீதம்!
தென்காசி, 6 டிசம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி பொன் ஆனந்தி (26). இவர்கள் இருவரும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ப
Tenkasi Online Game


தென்காசி, 6 டிசம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி பொன் ஆனந்தி (26). இவர்கள் இருவரும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் புகழினி என்கிற பெண் குழந்தை உள்ளது.

பிரகாஷ் கோவை மாவட்டத்தில் செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதேபோல், பொன் ஆனந்தியும் கடையநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனால், பொன் ஆனந்தி தனது மகளை பாவூர்சத்திரம் அருகே வசித்து வரும் தனது பெற்றோரிடம் விட்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில், வேலையில் இருக்கும்போதே ஆனந்தி எப்போதும் செல்போனும் கையுமாக இருப்பார் என்று கூறப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி, அதில் பணம் கட்டி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அவ்வாறு விளையாடும் பெரும்பாலான விளையாட்டுகள், தொடக்கத்தில் நாம் வெற்றி பெறுவது போன்றே வடிவமைக்கப்பட்டிருக்கும். பின்னர், நாம் அந்த விளையாட்டில் திறமையானவர் என்று நம்மையே நம்ப வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருக்கும் பணத்தை பறிப்பதே அவற்றின் நோக்கம்.

ரூ.63,000 பணத்தை இழந்த ஆனந்தி:

இதனை அறியாத ஆனந்தி, தான் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.63,000 பணத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்துள்ளார்.

இதனால், மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த 3ஆம் தேதி பாவூர்சத்திரத்துக்கு சென்று தனது மகளை பார்த்துவிட்டு மீண்டும் சிவகிரிக்கு சென்றுள்ளார். தொடர்ந்து, அன்றிரவு வீட்டிற்குள் வழக்கபோல் தூங்கச் சென்றவர், மறுநாள் காலையில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

இந்நிலையில், அவரது வீட்டிற்கு சென்ற மாமியார் செல்வி, நீண்டநேரம் கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. இதனால் செல்வி தன்னிடம் இருந்த மற்றொரு சாவியை கொண்டு வீட்டை திறந்து உள்ளே சென்றார்.

அப்போது வீட்டுக்குள் பொன் ஆனந்தி தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவக்கவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆனந்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, ஆனந்தி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.

அதில், தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் இந்த முடிவு எடுத்துள்ளேன் என்று அவர் உருக்கமாக எழுயிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, ஆன்லைன் விளையாட்டு மோகத்தால், இரண்டரை வயது குழந்தையை தவிக்கவிட்டு பெண் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN