Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 6 டிசம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சின்ன முனியசாமி. இவரது மனைவி காளியம்மாள். இந்த தம்பதியினர் இருவரும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கார்த்திகை தீபத்திருநாளின் 3-வது தினத்தை முன்னிட்டு நேற்று இரவு காளியம்மாள் அவர்களது வீட்டில் விளக்கு ஏற்றும் போது வீட்டிலுள்ள ஃபிரிட்ஜின் மீதும் ஒரு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு அருகிலுள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், ஃபிரிட்ஜ் மீது ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு தீப்பற்றி ஃபிரிட்ஜ் முழுவதுமாக தீப்பற்றி எரிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதன் காரணமாக வீட்டிலிருந்த மின்சாதனப் பொருட்களில் தீப்பற்றி கட்டில், பீரோ, மிக்சி, சமையல் பாத்திரங்கள் என அனைத்து தீயில் எரிந்து நாசமாகின.
இதையடுத்து விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்து, சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டரை ஒரு வழியாக மீட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த மின் விபத்தில் சின்ன முனியசாமி வீட்டில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN