Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 6 டிசம்பர் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட தனியாருக்கு சொந்தமான சுமார் 1500 ஏக்கர் பரப்பளவு கொண்ட சாத்கர் மலைப்பகுதி அமைந்துள்ளது.
இங்குள்ள ஏரியின் அருகே அழுகிய நிலையில் 2 பெரிய யானைகள், ஒரு குட்டி யானை என 3 யானைகளின் சடலங்கள் நேற்று (05.12.2025) கண்டெடுக்கப்பட்டது. மேலும் பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 20 நாட்களில் வெவ்வேறு இடங்களில் 5 யானைகள் உயிரிழந்தன.
தொடர் யானை உயிரிழப்பு குறித்து விசாரிக்க தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாப்பாளர் சிறப்பு குழு அமைத்து உத்தரவிட்டிருந்தார் அதன் அடிப்படையில், இன்று (06.12.2025) சம்பவ இடத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வனத்துறை குழு, மருத்துவ குழு மற்றும் ஆந்திராவை சேர்ந்த வனத்துறையினர் குழுவினர் விசாரணை செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் உயிரிழந்த யானைகளை சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து அதன் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து விழுப்புரம் தலைமை வன பாதுகாவலர் பெரியசாமி அளித்த பேட்டியில், “தலைமை வன உயிரின பாதுகாப்பாளர் அமைத்த கமிட்டி இன்று யானை உயிரிழந்த இடத்தில் ஆய்வு செய்தோம். அதன்படி யானையின் உடல் பாகங்களை சேகரித்துள்ளோம். தற்போது பிரேத பரிசோதனை முடிந்துள்ளது.
3 யானைகளும் வெவ்வேறு காலகட்டத்தில் இறந்ததாக தெரியவந்துள்ளது. 7 பேர் கொண்ட மருத்துவர் குழுவினர் இந்த பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்கள். அவர்களின் பிரேத பரிசோதனை முடிவிற்கு பிறகு தான் யானை உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும்.
மேலும் ஆய்வக பரிசோதனைக்காக உயிரிழந்த யானையின் டி.என்.ஏ. மாதிரி மற்றும் உடல் பாகங்கள், அங்கிருந்த தண்ணீரின் மாதிரி ஆகியவற்றை சேகரித்துள்ளோம். ஆய்வக முடிவு மற்றும் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் யானையின் உயிரிழப்புக்கான முழு காரணம் தெரியவரும்.
தமிழ்நாடு அரசு வன உயிரின பாதுகாப்பிற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதுவும் யானைகளை பாதுகாப்பிற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசை பொருத்தவரைக்கும் ஒவ்வொரு யானையின் இழப்பும் மிக முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
அதனை தடுக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் தற்போது ட்ரோன் மூலமாகவும் கண்காணித்து வருகிறோம்” என்றார்.
அதனைத் தொடர்ந்து கால்நடை பராமரிப்பு மற்றும் வனத்துறை மருத்துவர் கலைவாணன் அளித்த பேட்டியில், “யானைகள் உயிரிழப்பு தொடர்பாக வேட்டையாடப்பட்டோ, விஷம் வைத்துக் கொள்ளப்பட்டோ இருக்குமா?. அல்லது மின்சாரம் தாக்கியோ, மின்னல் தாக்கியோ, நோய் தாக்கியோ உயிரிழந்து இருக்குமா அல்லது தண்ணீரில் ஏதேனும் ரசாயனம் கலந்திருக்குமா? என பல்வேறு சந்தேகங்கள் உள்ளது.
அந்த சந்தேகங்களின் அடிப்படையில் தான் உயிரிழந்த யானைகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய உள்ளோம். தற்போதைய சூழலில் தண்ணீரில் வேதி பொருள் கலந்ததாகவோ, வேட்டையடியதற்கான ஆதாரமோ இல்லை.
5 யானைகள் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு இடத்தில் உயிரிழந்துள்ளது.
ஆகவே இவற்றிற்கான பிரேத பரிசோதனை முடிவு வந்தால் தான் காரணம் தெரிய வரும். மேலும் இறந்த யானைகளின் உடலில் இருந்து எந்த பாகமும் காணாமல் போகவில்லை என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN