Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமாக இருக்கும் இண்டிகோவின் சேவைகள் கடந்த சில நாட்களாகவே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நாடு முழுக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. சிறு நகரங்கள் மற்றும் பெரிய நகரங்களில் இண்டிகோ மட்டுமே சேவை வழங்கி வந்த நிலையில், இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.
இதற்கிடையே இண்டிகோ விமானச் சேவை இந்தியா முழுவதும் இன்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று (டிச 07) 100 இண்டிகோ விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். மாற்று ஏற்பாடுகளும் போதியளவில் இல்லை என்பதால் பலரும் தங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்குப் போக முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. விமானங்கள் ரத்து படிப்படியாக சரியாகும் என தெரிகிறது.
அதுவரை பணியாளர் பணிநேர கட்டுப்பாடு விலக்கி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் அட்டவணைகள் இயல்பு நிலைக்கு திரும்பத்தொடங்கி, அடுத்த 3 நாட்களுக்குள் முழுமையாக நிலைபெறும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
Hindusthan Samachar / vidya.b