Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 7 டிசம்பர் (ஹி.ச.)
மதுரையில் இன்று (டிச 07) முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 'தமிழகம் வளர்கிறது' எனும் தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மொத்தம், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டன.
இதன்மூலம், 36,660.35 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளில், 56,766 புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
ஆட்சிக்கு வந்தவுடன் நலிவடைந்த பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதை அறிந்து, புரிந்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினோம். வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்தோம். முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் தான் என்பதை உணரச் செய்தோம். அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தமிழகம் ரைஸிங் என்ற மாநாட்டை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் முதலீட்டாளர்களின் பங்கும் அவசியம். அனைத்து துறைகளையும் ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
இந்தியாவில் எந்த மாநிலங்களும் ஒப்பந்தங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததில்லை. முதலீடு அவ்வளவு எளிதில் கிடைத்திடாது. மாநிலத்தின் கொள்கைகள், கட்டமைப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, தங்களின் வணிக நோக்கங்களுக்கு பொரூத்தமாக இருக்கிறதா? என்பதை பார்த்து தான் இடத்தை தேர்வு செய்வார்கள். அப்படி முதல் பெயராக தமிழகம் இருக்கிறது.
மதுரையை தூங்கா நகரம் என்பதற்கு பதிலாக, விழிப்புடன் இருக்கும் நகரம் என்று தான் சொல்ல வேண்டும். தமிழர் நாகரிகம் எந்த அளவுக்கு தொன்மையானது என்பதை மதுரை எடுத்து கூறுகிறது. இதன் காரணமாகத்தான் இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்து தொடங்கி எழுத வேண்டும் என்று அடிக்கடி கூறி வருகிறேன். மதுரை கோவில் நகரமாக மட்டுமல்லாமல், தொழில் நகரமாகவும் இருக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க உள்ளோம். இதன்மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தொழில்களை மதுரையில் நிறுவியுள்ளன.
மதுரையை தொழில் நகரமாக்குவதே ஆசை. மேலூரில் 278.26ஏக்கரில் பிரமாண்ட சிப்காட் தொழில் நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.
நாட்டிலேயே அதிக பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b