Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 7 டிசம்பர் (ஹி.ச.)
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா–பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வருகிறார்.
இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்கும் என்றும் டிரம்ப் எதிர்பார்த்தார். ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், டிரம்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அமைதிக்கான பரிசை வழங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு ஜூன்–ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதற்கான போட்டி அட்டவணை வெளியீட்டு நிகழ்ச்சி வாஷிங்டனில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டது. இந்த விருது மக்கள் ஒன்றிணைந்து எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கையை கொண்டு வரும் தனி நபர்களை அங்கீகரிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
இந்த விருதை டிரம்புக்கு, சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் ஜியானி இன்பான்டினோ வழங்கினார். அப்போது டிரம்புக்கு தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டது. தங்கக் கோப்பையும் வழங்கப்பட்டது.
இது குறித்து இன்பான்டினோ கூறும்போது,
மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் டிரம்ப். உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது உங்கள் அமைதி பரிசு.
என்றார்.
தனக்கு அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டதற்கு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:
இது உண்மையிலேயே என் வாழ்க்கையின் மிகப் பெரிய மரியாதைகளில் ஒன்றாகும். நான் பதவியேற்பதற்கு முன்பு அமெரிக்கா அதிகமாக சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் தற்போது சிறப்பாக முன்னேறி வருகிறது.
என்றார்.
Hindusthan Samachar / JANAKI RAM