Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 7 டிசம்பர் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் கோயில் தீப விவகாரம் நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெரிதாக பேசப்பட்டது.
திருப்பரங்குன்றம் கோயில் மலை மீது தொடர்ந்து இரண்டு நாட்கள் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு தீபம் ஏற்ற அனுமதி வழங்கவில்லை.
தர்கா அருகே தீபம் ஏற்றினால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். பாரம்பரிய முறைப்பாடி வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது.
திமுக நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை. இந்துக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்க பார்க்கிறது என்று பாஜக குற்றம்சாட்டியது.
இதற்கிடையே தீப விவகாரத்தில் திருப்பரங்குன்றம் முழுவதும் பெரும் பதற்றமாக இருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக திருப்பரங்குன்றம் செல்ல முயன்றார்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் காவல்துறையினர் கும்மங்குடி அருகே எச்.ராஜாவின் காரை தடுத்து நிறுத்தினார்கள்.
இதனால் ஆவேசம் அடைந்த எச்.ராஜா மற்றும் பாஜகவினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை எச்.ராஜா தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், மத கலவரம் தூண்டும் வகையில் பேசுதல், முதல்வர், அமைச்சர்களை அவதூறாக பேசுதால் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN