Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 7 டிசம்பர் (ஹி.ச.)
விமானப்பணி, ஊழியர்களுக்கான பணி நேரம் உள்ளிட்ட புதிய விதிகள் காரணமாக, இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 1000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நிலைமை மோசம் அடைந்ததால் பயணிகளிடம் விமான நிறுவனம் மன்னிப்பு கோரியது.
இண்டிகோ விமானங்களின் சேவை மெல்ல மெல்ல சரியாகி வருவதாகவும் அறிவித்தது.
புதிய விதிகளை விமான போக்குவரத்து ஆணையரகம் திரும்ப பெற்று விட்டாலும், 6வது நாளாக இன்றும் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று இரவுக்குள் ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பயணக் கட்டணத்தை பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் திருப்பி தர வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருவது குறித்து விளக்கம் கேட்டு, இண்டிகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பெர்ஸூக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில்,
'நம்பிக்கையான செயல்பாடுகள், பயணிகளுக்குத் தேவையான வசதிகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டீர்கள். உங்கள் கடமையில் தோல்வியடைந்துள்ளீர்கள். இந்த விதிமீறல்களுக்காக விமானப் போக்குவரத்து விதிகளின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் சட்ட நடவடிக்கை எஷடுக்கப்படும்.'
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM