Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சியில், நாள்தோறும் 106 கோடி லிட்டர் குடிநீரை, சென்னை குடிநீர் வாரியம் குழாய் வாயிலாக விநியோகித்து வருகிறது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு தேவைப்படுவோர், முன்பதிவு செய்து கட்டண அடிப்படையில் குடிநீரை வாங்கி வருகின்றனர்.
தினமும் 1,000 லாரிகளில் மெட்ரோ வாட்டர் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, முன்பதிவு லாரி குடிநீரின் விலையை, சென்னை குடிநீர் வாரியம் உயர்த்தி உள்ளது.
குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிக்கு ரூ.75-ம், 9,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிக்கு ரூ.125-ம் கட்டணத்தை சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
6,000 லிட்டர் லாரி தண்ணீர் ரூ.475ல் இருந்து ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
9,000 லிட்டர் லாரி தண்ணீர் ரூ.700ல் இருந்து ரூ.825 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், 12,000, 18,000 லிட்டர் லாரி குடிநீரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மேலும், வணிக பயன்பாட்டுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி ரூபாய் 735ல் இருந்து 1,025க்கும், 9,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி ரூபாய் 1,050ல் இருந்து 1,535 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
12,000, 18,000 லிட்டர் லாரி குடிநீரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b