Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 7 டிசம்பர் (ஹி.ச.)
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரஞ்சன் - முஸ்கா தம்பதி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள சவேரியார் தேவாலயம் முன்பு பலூன் வியாபாரம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சொந்த ஊர் செல்வதற்காக நேற்று மாலை குடும்பத்துடன் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு அவர்கள் வந்துள்ளனர்.
அப்போது, ரயில் நிலையத்திற்கு வெளியே அமர்ந்திருந்த ஒருவர், குழந்தைக்கு உணவு வாங்கி தருவதாக கூறி, முஸ்கா உடன் இருந்த சாராவை தூக்கிக் கொண்டு ஓடினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரஞ்சன், அவரை துரத்தி பிடிக்க முயன்றார்.
ஆனால், அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்த ரஞ்சன் ரயில்வே போலீசாருக்கும், கோட்டார் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில், ரயில்வே போலீஸ்சார் கோட்டார் போலீசாருடன் இணைந்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ரயில்வே நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில், இளைஞர் ஒருவர் குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், குழந்தையை கடத்திச் சென்றவர் நாகர்கோவில் மீனாட்சிபுரம் காந்தாரி அம்மன் கோயில் தெருவில் குடியிருக்கும் ஒரு தம்பதியினரின் உறவினரான யோகேஷ் குமார் என்பது தெரியவந்தது.
மேலும், அந்த நபர் வடசேரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக அங்கு சென்ற போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையுடன் நின்றிருந்த யோகேஷ் குமாரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் குழந்தையை மீட்ட போலீசார், அதனை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மருத்துவ பரிசோதனை மேற்கோண்டனர். பின்னர் குழந்தை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, யோகேஷ் குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். யோகேஷ் குமாருக்கு குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? குழந்தையை விற்பதற்காக அவர் கடத்திச் சென்றாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN