Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 7 டிசம்பர் (ஹி.ச.)
புதுச்சேரி அடுத்த நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் புதுக் காலனி பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 28). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நதியா.
இவர்களுக்குக் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அனுஷ் என்று பெயரிட்டனர்.
இந்த நிலையில் குழந்தைக்கு கடந்த 4ந் தேதி நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2-வது தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போட்டதில் இருந்து குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் சோர்வாக இருந்தது.
இதையடுத்து பெற்றோர் குழந்தையை நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த செவிலியர் குழந்தைக்கு பால் கொடுக்குமாறு அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பியதாக தெரிகிறது.
இதையடுத்து வீட்டுக்கு சென்ற குழந்தைக்கு இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் உடனடியாக மீண்டும் நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர்.
அங்கு பணியில் இருந்த மற்றொரு செவிலியர் குழந்தையை சோதித்துவிட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து குழந்தையை மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குழந்தையின் தந்தை அருண் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN