Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.)
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக டிசம்பர் 7, 2025 முதல் டிசம்பர் 9, 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி–மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை மட்டும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரையில் டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து டிட்வா புயலின் காரணமாக கடுமையான மழை பதிவு இருந்தது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவு செய்யப்பட்டது. அதே சமயத்தில் தென் தமிழகத்திலும் நல்ல மழை பதிவாகியுள்ளது.
வரவிருக்கும் நாட்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பதிவாகக்கூடும் என்றும், இந்த நிலை டிசம்பர் 13, 2025 வரை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது, அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், குறிப்பாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், நெல்லை, கோவை, நீலகிரி பகுதிகளில் லேசான மழை பதிவாகக்கூடும் என தெரிவித்துள்ளார்.
அதே சமயம் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்; ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை இருக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து இரண்டு வாரங்களுக்கு சென்னையில் மழை இருக்காது. வரக்கூடிய டிசம்பர் 9 அல்லது 10 ஆம் தேதி செங்கல்பட்டு உள்ள சில மாவட்டங்களில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மிதமான மழை இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN