Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 7 டிசம்பர் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தின் கீழ்பகுதியில் சமீப காலமாக அடிக்கடி சேதமாகி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
தற்காலிக சீரமைப்பு பணி மட்டுமின்றி முறையாக திட்டமிடாமல் பணி செய்வதே இதற்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
பாலத்தில் மழை நீர் வடிகால் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் தேங்கி, கான்கிரீட் சாலையிலும் பழுது காணப்பட்டது.
இந்நிலையில் தற்போது சீரமைப்பு பணிக்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
டூ-வீலர்கள், இலகு ரக வாகனங்கள் பாலத்தின் மேற்புற மற்றொரு சாலை வழியாக வழக்கம் போல் செல்லலாம். திருச்சி, கரூர், வெள்ளகோவில், தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள், லாரிகள், கன்டெய்னர் லாரி உள்ளிட்டவை பூந்துறை சாலையில் நாடார்மேடு பகுதியில் இடப்புறம் திரும்பி சாஸ்திரி நகர் மேம்பாலம் வழியே சென்னிமலை சாலையை அடைந்து வழக்கமான பாதையில் செல்ல வேண்டும். பாலத்தின் ஒரு புறம் சீரமைப்பு பணி முடிந்துள்ளது.
கான்கிரீட் கலவை முழுமையாக உலர வேண்டும். அதற்கு மூன்று நாட்களாகும். அதன் பின் பாலத்தின் மற்றொரு புறமும் சீரமைக்கப்படும். அங்கு கான்கிரீட் கலவை உலர மூன்று நாட்களாகும்.
அதன் பின் அதிகாரிகள் சோதனை செய்வர். இதனால் வரும், 11ம் தேதி வரை மாற்று பாதையில் தான் வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b