Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச)
விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை வழங்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
2015ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், விக்கிரபாண்டியபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகளால் வேளாண் நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
இதனால், விக்கிரவாண்டியபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கக்கூடாது என கூறி, விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின்போது ஓஎன்ஜிசி தளவாடங்களைச் சேதப்படுத்தியதாக, அவர் மீது பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் மாவட்ட நீதிமன்றம், பி.ஆர். பாண்டியன் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நீதிமன்றத்தின் உத்தரவு என்பது, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், உரிமைகளை பாதுகாக்கவும் போராடுகிற, விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர், எதிர்காலத்தில் எந்தவொரு உரிமைக்களுக்காகவும் போராடி விடக் கூடாது என்பதற்கான மறைமுக அச்சுறுத்தலாகவே தமிழக வாழ்வுரிமைக் கட்சி பார்க்கிறது.
அதாவது இனி வரும் காலங்களில், மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பல்வேறு நாசக்காரத் திட்டங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுத்தும் போது, அத்திட்டங்களுக்கு எதிராக எவரும் போராடி விடக்கூடாது என நீதிமன்றம் நினைத்திருக்கிறது.
இதனால் தான், ஜனநாயக, புரட்சிகர சக்திகளையும் முற்றிலும் ஒழித்துக் கட்டும் வகையில், பி.ஆர்.பாண்டியனுக்கு இப்படியான ஒரு உண்மைக்கு புறம்பான ஒரு தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
மிசா, தடா போன்ற ஆள்தூக்கி கருப்பு சட்டங்களை மிகக் கடுமையாக்க வேண்டும் என்பது தான் ஒன்றிய பாஜகவின் விருப்பம். அந்த விருப்பத்தை தான் சமீப காலங்களாக நீதிமன்றங்கள் நிறைவேற்றி வருவது கண்கூடாகத் தெரிகிறது.
நீதித்துறையை சக்திமிக்க வகையில் சமரசமின்றி பயன்படுத்தி சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் ஒடுக்குண்ட மக்கள் கையூன்றி எழவும், நாகரீகச் சமுதாயமாய் நாடு பரிணமிப்பதைத் தடுக்கும் அதிகார அத்துமீறல்களை தடுக்கவும் தமது சட்ட மேதமையையும் அயராத உழப்பையும் நல்கிய கண்ணியம்மிக்க நீதிமன்றங்களும், நீதிபதிகளும் இருந்தனர்.
இந்திய நீதி பரிபாலனத்தின் அடிப்படை அம்சமே “ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது” என்பதுதான். இதை அக்கறையுடன் கடைபிடிப்பது இந்திய நீதிமன்றங்களின் தலையாய கடமையாகும்.
ஆனால், சமீபத்திய செயல்பாடுகளின் காரணமாக, நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மீது பொதுமக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, பி.ஆர்.பாண்டியன் தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசு முன் வந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்து, அவருக்கு விடுதலை பெற்றிட துணை புரிய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ