Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச)
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இலவச லேப்டாப்.. கண்துடைப்பு செய்யும் திமுக அரசு என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாமல் இருக்கும் சூழலில் தற்போது கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்த உள்ளது யானைப் பசிக்கு சோளப்பொறி போட்டது போல் உள்ளது. திமுக ஆட்சி முடிவடைய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பெயரளவிற்கு மட்டும் லேப்டாப் கொடுத்து விட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று தேர்தல் பிரச்சாரங்களில் மக்களை ஏமாற்ற முனைகிறது இந்த விடியா திமுக அரசு.
ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை என்கிற பெயரில் முந்தைய ஆட்சியில் செயல்பாட்டில் இருந்த சில திட்டங்களை நிறுத்திவிட்டு அடுக்கடுக்கான விதிமுறைகளுடன் அத்திட்டத்தினைத் செயல்படுத்தி வருகிறது திமுக அரசு.
இத்திட்டத்திலேயே இன்னும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் விடுபட்டுள்ள நிலையில் தற்போது லேப் டாப் வழங்கும் திட்டத்தினை ஆட்சி முடிவடையும் நேரத்தில் செயல்படுத்தத் துடிப்பது திமுக-வின் தோல்வி பயத்தினையே எதிரொலிக்கிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவைகளில் பல வெற்று வாக்குறுதிகளாகவே இருக்கும் நிலையில் நீங்கள் என்ன செய்தாலும் தமிழக மக்கள் நீங்கள் செய்த துரோகங்களை மன்னிக்க மாட்டார்கள்.
வரும் தேர்தலில் கண்டிப்பாக அதற்கு விடை தருவார்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ