Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 7 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் முதல்முறையாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் இறங்க இருக்கிறது.
முதல் தேர்தலிலேயே வெற்றிக் கனியை பறித்துவிடும் ஆர்வத்தில் விஜய் உள்ளார். அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற் கொண்டு வருகிறார்.
துரதிர்ஷ்டவசமாக கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கடும் நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் பலியானார்கள். அதன் பிறகு, அவரது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. உள் அரங்க நிகழ்ச்சிகளுக்கே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுவிட்டது.
அதன் பிறகு, கடந்த மாதம் காஞ்சீபுரத்தில் உள் அரங்க கூட்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பிறகு, புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த தமிழக வெற்றிக் கழகம் அனுமதி கோரியது. ஆனால், தமிழக சாலைகளைவிட புதுச்சேரி சாலைகள் சிறியவை என்று கூறி, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு புதுவை அரசு அனுமதி மறுத்துவிட்டது.
இந்த நிலையில், பொதுக்கூட்டத்திற்காவது அனுமதி தாருங்கள் என்று மீண்டும் கோரப்பட்டது. புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு த.வெ.க. பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.
புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் வரும் 9-ந் தேதி த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு மேடை அமைக்கப்படவில்லை. மாறாக, பிரசார வாகனத்தில் நின்றபடியே விஜய் பேச இருக்கிறார்.
கூட்டத்தில் பங்கேற்கும் 10 ஆயிரம் பேருக்கும் கியூ.ஆர். கோடுடன் கூடிய அனுமதி அட்டை வழங்கப்பட இருக்கிறது. மேலும், 10 கட்டங்களாக பிரித்து ஒவ்வொரு கட்டத்திற்குள் ஆயிரம் பேர் அமரும் வகையில் தடுப்பு கட்டைகளுடன் இருக்கைகள் அமைக்கப்படுகிறது.
தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்த தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
9-ந் தேதி காலை 10.30 மணி முதல் 12 மணி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் விஜய் 45 நிமிடங்கள் பேச இருப்பதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து தருவதாக புதுச்சேரி அரசு உறுதியளித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM