ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு இன்று ஒப்பந்தம் - மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.) மதுரையில் இன்று (டிச 07) நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில் ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு இன்று ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப
ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு இன்று ஒப்பந்தம் - மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்


சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.)

மதுரையில் இன்று (டிச 07) நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில் ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு இன்று ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று(டிச 07) மாமதுரை திருநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதனையொட்டி, மதுரை மாநகர் மாபெரும் அளவில் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ்நாடு வளர்கிறது' எனும் தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு 2025 நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவற்றின் வாயிலாக ரூ.36,660.35 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளில் 56,766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கப்படுகிறது. அத்துடன், மேலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021-ல் ஆட்சிப்பொறுப்பேற்றபின் மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18,795 கோடியில், 18 ஆயிரத்து 881 வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்றி உள்ளார். மேலும், ரூ.8,668 கோடியில் 96 லட்சத்து 55 ஆயிரத்து 916 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 463 கோடி மதிப்பிலான பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன

இவற்றை தொடர்ந்து, நாளை நடைபெறும் விழாவில் 63 ஆயிரத்து 698 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் ரூ.3 ஆயிரத்து 65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.150.28 கோடி செலவில் மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தைத் திறந்து வைக்கிறார்.

திராவிட மாடல் அரசின் சார்பில், 2021-க்கு பின் மதுரை மாவட்டத்திற்கு அனைத்து வகையிலும் பெருமை சேர்த்து வருகிறார்.

இவைகளை எல்லாம் நினைவில் கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளபடி, இன்று மதுரைக்கு தேவைப்படுவது வளர்ச்சி மட்டும்தான் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b