Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.)
ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் நடைபெற்றுள்ளது, மடியில்
கனமில்லை என்றால் திராவிட மாடல் அரசு
விசாரணைக்கு அஞ்சி தப்பி ஓடுவது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறையில் 2538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்க ஒரு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டு பெறப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியானது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த காவல்துறை ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாட்டையே உலுக்கிய ஊழல் அம்பலப்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தத் துடிக்கும் திமுக அரசு, அந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த முன்வராதது கண்டிக்கத்தக்கது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமிப்பதற்கான அரசாணை 14.11.2023-ஆம் நாளும், ஆள்தேர்வு அறிவிக்கை 02.02.2024-ஆம் நாளும் வெளியிடப்பட்டன.அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆள்தேர்வில் ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டதையும், அப்பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதையும் சோதனைகளின் மூலம் கண்டறிந்த அமலாக்கத்துறை, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி 232 பக்க ஆவணங்களுடன் அக்டோபர் 27-ஆம் நாள் தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்த ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அக்டோபர் 29&ஆம் நாள் நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது; சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்விலும், மதுரைக் கிளையிலும் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிடக் கோரி வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. அந்த வழக்குகளில் ஒன்றின் விசாரணையின் போது, அமலாக்கத்துறையின் அறிக்கை எவ்வாறு வெளியானது? என்று நீதிபதிகள் வினா எழுப்பியிருந்தனர்.
அதையே காரணம் காட்டி, ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் குறித்த அமலாக்கத்துறை அறிக்கை எவ்வாறு வெளியானது? என்பது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இந்த ஊழல் குறித்த அமலாக்கத்துறையின் அறிக்கை வெளியானது அதிசயம் அல்ல. ஊடகத் தொடர்புகள் கடந்த காலங்களில் இல்லாத அளவில் அதிகரித்திருப்பதுடன், சமூக ஊடகங்கள் பெருகியுள்ள நிலையில், இத்தகைய அறிக்கைகள் வெளிவருவது இயல்பானது தான். கடந்த காலங்களிலும் இதே போன்ற பல அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு இருக்கும் போது இந்த அறிக்கை வெளியானது குறித்து விசாரணை நடத்த ஆணையிட்டிருக்கும் தமிழக அரசு, தமிழகத்தையே உலுக்கிய வேலைவாய்ப்பு ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?
தமிழ்நாட்டில் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் பட்டப்படிப்பை முடித்து விட்டு, அரசு வேலைக்கு சென்று விட முடியாதா? என போட்டித் தேர்வு பயிற்சி மையங்களிலும், நூலகங்களிலும் தவம் கிடக்கின்றனர். அவர்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசுத்துறை வேலைகளை திமுக அரசு விலை வைத்து விற்பனை செய்திருக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவுகளை திமுக அரசு தட்டிப் பறித்திருக்கிறது. இதற்கு மன்னிப்பே கிடையாது.
தமிழ்நாட்டில் நல்லாட்சி நடத்துவதாக நாடகமாடும் திமுகவினர், ஊழல்கள் செய்வதை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சியில் ஊழல்கள் நடக்காதத் துறையே கிடையாது என்பது தான் அனைத்துத் தரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது. வேலைவாய்ப்பு வழங்குவதில் தொடங்கி, ஆற்று மணல் கொள்ளை, கனிமவளங்கள் கொள்ளை, இராம்சார் தளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்குவதில் ஊழல், மின்சாரம் கொள்முதல் செய்வதில் ஊழல், மின்மாற்றிகள் கொள்முதல் செய்வதில் ஊழல், சரக்குந்து போக்குவரத்து ஒப்பந்த ஊழல் என திமுக அரசில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டால், நீதியரசர் சர்க்காரியா ஆணையத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊழல்களின் பட்டியலை விட மிகவும் அதிகமாக நீண்டு கொண்டே செல்லும். திமுக என்றால் ஊழல் என்று தான் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
ஆனால், எந்த ஊழலும் செய்யவில்லை; உலகின் உத்தமமான நிர்வாகத்தை வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற உலகமகா பொய்யை திமுக தொடர்ந்து கூறி வருகிறது. திமுக ஆட்சியாளர்கள் எந்த ஊழலும் செய்ய வில்லை என்றால், குறிப்பாக நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிகாரிகளை நியமித்ததில் எந்த ஊழலும் நடைபெற வில்லை என்றால், அது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த திமுக அரசு அஞ்சுவது ஏன்?
இதற்கு முன் தமிழ்நாட்டில் ரூ.4730 கோடி அளவுக்கு மணல் கொள்ளை நடந்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைத்த பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்த அமலாக்கத் துறை, அது குறித்த ஆதாரங்களை தமிழக அரசுக்கு அனுப்பி, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யுமாறு கடந்த ஆண்டு ஜூன் 13&ஆம் தேதி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு கடிதம் எழுதியது. ஆனால், அதன் மீது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் தான் வேலைவாய்ப்பு ஊழல் குறித்த அறிக்கை மீது ஒன்றரை மாதமாக நடவடிக்கை இல்லை.
ஆட்சி அதிகாரத்தை தீமைகளில் இருந்து மக்களைக் காக்கும் கவசமாக பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஊழல் செய்த தீயசக்திகளை காப்பாற்றுவதற்கான கவசமாக ஆட்சி அதிகாரத்தை திமுகவினர் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
திமுகவினரால் தவறாக பயன்படுத்தப்படும் அந்தக் கவசம் இன்னும் 3 மாதங்களில் காணாமல் போய்விடும். அடுத்து அமையவிருக்கும் அரசில் திமுக ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
மக்களைச் சுரண்டி ஊழல் செய்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பதை வாக்குறுதியாக அளிக்கிறேன் என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ