Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 17-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சமூகநீதியை பாதுகாப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்து வரும் தங்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் தேவையை தாங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மனிதர்களின் உடல்நலக் குறைவை சரி செய்ய வேண்டும் என்றால், அதற்கான முதல் நடவடிக்கை நோய்க்கான காரணத்தைக் கண்டறிவதே.
அதே போல் சமூகத்தின் நிலையை கண்டறிவதற்கான எக்ஸ்ரே கருவி தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும். சாதிவாரி மக்கள்தொகை விவரங்களைத் திரட்ட சாதிவாரி சர்வே நடத்த திமுக அரசு மறுப்பது சமூகநீதிக்கு இழைக்கப்படும் அநீதியும், துரோகமும் ஆகும். சமூகநீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு தான். விடுதலை அடைவதற்கு முன்பே தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடிப்படையில் 100% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்தது. அதற்கு காரணம் அப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் அரசிடம் தயாராக இருந்தது தான்.
அந்த நிலை மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு தமிழக அரசே தடையாக இருக்கக் கூடாது. எனவே தான், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மறுத்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், உடனடியாக சாதிவாரி சர்வே நடத்த வலியுறுத்தியும் சென்னையில் டிசம்பர் 17-ம் நாள் எனது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களை சமூக, கல்வி, பொருளாதார நிலையில் மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். எனவே, இந்தப் போராட்டத்தில் சமூகநீதியில் அக்கறை கொண்ட தாங்களும் பங்கேற்று தமிழகத்தில் சமூகநீதியை பாதுகாக்க ஆதரவளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM