Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 8 டிசம்பர் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீராணநல்லூர் மெயின் ரோட்டு தெருவைச் சேர்ந்தவர் அமல் ராஜ் மனைவி அகல்யா(46). இவர் தற்போது கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் அகல்யா, காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள தனியார் வங்கி, மகளிர் சுய உதவிக் குழு உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் தினந்தோறும் நின்று கொண்டு அங்கு நகைகளை மீட்க வரும் பெண்களை குறிவைத்து அவர்களிடம், தான் சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருவதாகவும், எனக்கு தெரிந்த நபர் ஒருவரிடம் கோடிக்கணக்கான கருப்பு பணம் உள்ளதாகவும், அதனை பெற்று பல்வேறு நபர்களுக்கு வட்டியில்லாத கடனாக பெற்று தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய பெண்கள் அவரின் ஆசை வார்த்தைக்கு மயங்கி உள்ளனர். இதனை பயன்படுத்தி அவர்களுக்கு பல லட்சம் கடன் பெற்று தருவதாக உறுதியளித்துள்ளார். மேலும், உங்கள் நகைகளை எங்களிடம் கொடுத்தால் மூன்று மாதங்களுக்கு வட்டி இல்லை நகை எங்களிடம் தான் இருக்கும் அதனை நாங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பத்திரமாக வைத்து இருப்போம் என கூறியுள்ளார்.
உங்களுக்கு 20 லட்சம் வட்டி இல்லாத கடனாக இரண்டு நாட்களில் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைப்போம் அப்போது அந்த நகைகளை நீங்கள் மீட்டு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என உயர் அதிகாரிகள் கையெழுத்து போட்ட போலி பத்திரத்தை காட்டி ஏமாற்றி உள்ளார்.
இதனால் படிப்பறிவு இல்லாத பெண்கள் பலர், இவரை நம்பி வட்டி கடன் பெற்று வங்கியில் இருந்து நகைகளை மீட்டு அவரிடம் கொடுத்து உள்ளனர்.
இதுபோல படித்து விட்டு வேலையில்லாத இளைஞர்களிடம், அரசியல் பிரமுகர்கள் பெயரை குறிப்பிட்டு அவரிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாகவும், மேலும் பல பேரிடம் மாவட்ட அலுவலகம் மூலம் 50 லட்சம் வரை சுய தொழில் செய்வதற்கு லோன் வாங்கி தருவதாகவும் கூறி பல்வேறு நூதன முறையில் போலி கைழுத்தை காண்பித்து பல லட்சம் முன் பணமாக பெற்றதாக கூறப்படுகிறது. இது போன்ற கடந்த இரண்டு வருடங்களாக ஏமாற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடம் பலமுறை ஏமாற்றம் அடைந்த பெண்கள், மற்றும் இளைஞர்கள் அவரிடம் நகை, பணத்தை கேட்டு உள்ளனர். அப்போது பல போலியான கதைகளை கூறி அவர்களை சமாதானம் செய்து வந்துள்ளார். ஆனால் ஏமாற்றம் அடைந்த சுமார் 12 நபர்கள், காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார், அகல்யாவை கைது செய்து விசாரணை செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவரின் பெயர் அகல்யா என்பதும், இவர் ஈரோடு மாவட்டம் விஐயமங்கலம் தாலுக்கா பெரிய வீர சங்கிலி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் இவர் கடந்த 2018 ஆம் நகை கடையில் திருட்டு வழக்கில் கைது செய்து சிறைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.
மேலும் இவர் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 100 பவுன் தங்க நகைகளை மோசடியாக ஏமாற்றி வந்தது தெரியவந்தது. மேலும் அரசு வேலை, லோன் வாங்கி தருவதாகவும், கூறி பல லட்சம் பணம் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Hindusthan Samachar / ANANDHAN