Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 8 டிசம்பர் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் புதிதாக நவீன வசதி கொண்ட சொகுசு மதுபானம் கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதுபான கூடத்துக்கு அருகில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இதனால், பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று பலர் மதுபான கூடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, இந்த மதுபான கூடத்தை அகற்ற வேண்டும் என தவெக சார்பில் நேற்று (07.12.2025) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
அதே சமயம் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுபானக் கூடம் முன்பு காவல்துறையினர் கயிறுகள் கட்டி தடுப்புகள் அமைத்திருந்தனர்.
இத்தகைய சுழலில் தான், அந்த தடுப்பை மீறி மதுபானக் கூடத்துக்குள் நுழைந்து த.வெ.க. தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும் த.வெ.க.வினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது தவெக தொண்டர் ஒருவர், அங்குப் பாதுகாப்புப் பணியில் தலைமைக் காவலர் அருள் என்பவரின் கையை கடித்தார்.
இந்த செயல், காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதோடு இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் காவலரின் கையை கடித்த த.வெ.க தொண்டர் ஜெமினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டது தொடர்பாக அக்கட்சியின் தொண்டர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தமாக இந்த விவகாரத்தில் த.வெ.க.வைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN