Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 8 டிசம்பர் (H.S.)
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன். இவரது மனைவி கருமாண்டி செல்லிபாளையத்தை சேர்ந்தவர் விஜயா.
இவர்கள் இருவருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், இவர்கள் இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, விஜயா பெருந்துறை கொங்கு நகரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், செங்கோட்டையன் வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், செங்கோட்டையன் தனது பெயரில் உள்ள சொத்தை விற்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சொத்தை வாங்க முயன்றவர்கள், செங்கோட்டையன் முதல் மனைவி விஜயாவிடம் கையொப்பம் வாங்கி வருமாறு கூறியதாக தெரிகிறது.
ஏனென்றால், அந்த சொத்து செங்கோட்டையன் மற்றும் அவரது முதல் மனைவி விஜயா பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, செங்கோட்டையன் தனது தரப்பு உறவினர்கள் மூலம், முதல் மனைவியான விஜயாவிடம் சொத்தை விற்பதற்கு கையெழுத்து இடுமாறு கூறியதாக தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜயா அந்த சொத்தில், தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்று கேட்டாராம். இதற்கு, விஜயா கேட்ட தொகை அதிகமாக இருப்பதாக கூறி செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நான் கேட்ட தொகையை எனக்கு தந்தால் தான் சொத்தை விற்பதற்கான ஆவணங்களில் கையெழுத்து இடுவதாக விஜயா உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதனால், விஜயா மீது செங்கோட்டையன் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பெருந்துறை காஞ்சி கோவில் சாலை வள்ளலார் வீதி அருகே விஜயா நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த செங்கோட்டையன் விஜயாவை வழி மறைத்து ஆவணங்களில் கையெழுத்திடுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜயாவை செங்கோட்டையன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த விஜயா ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள செங்கோட்டையனை தேடி வருகின்றனர்.
சொத்து விவகாரம் தொடர்பாக முதல் மனைவியை கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN