மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைத்து வனத்துறை உத்தரவு
சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.) கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப
மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைத்து வனத்துறை செயலாளர் உத்தரவு


சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.)

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வால்பாறை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஐயர்பாடி தேயிலைத் தோட்டத்தில் சிறுவன் ஒருவனை சிறுத்தை இழுத்துச் சென்று கொன்றுள்ளது.

வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்ட எஸ்டேட் குடியிருப்புகளில் வனவிலங்குகளின் நடமாட்டத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு வனத்துறையினர், அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும், தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் எஸ்டேட் மேலாளர்களுடனும் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

தோட்ட அதிகாரிகளுக்கு, தொழிலாளர் குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதர்களை அகற்றி சுத்தமாக வைத்தல். தெளிவான நிலையை ஏற்படுத்த வீடுகளைச் சுற்றி விளக்குகள் அமைத்து, வெளிச்சத்தை உறுதி செய்தல், மாலை நேரங்களில் குடியிருப்புவாசிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த தோட்டத்தில் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. நீண்ட கால தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த, குறிப்பாக புலிகள் காப்பக எல்லைக்கு வெளியே உள்ள எஸ்டேட் பகுதிகளில், தலைமை வனஉரியினக் காப்பாளரின் பரிந்துரையின் பேரில், கூடுதல் தலைமை முதன்மை தலைமை வனக்காப்பாளர் ராம சுப்பிரமணியன் தலைமையில், உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.

அதில் துணை இயக்குனர், ஆனைமலை புலிகள் காப்பகம், சார்-ஆட்சியர், பொள்ளாச்சி, பிரதிநிதி - இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, நகராட்சி ஆணையர், வால்பாறை. உதவி ஆணையர், தொழிலாளர் (தோட்டங்கள்) வால்பாறை மண்டலம் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு, வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கவும் அதனை உறுதி செய்யவும், நிலைமைகளை மதிப்பீடு செய்து குறிப்பிட்ட பரிந்துரைகளை வழங்கும். இக்குழு தனது அறிக்கையினை 2 வாரங்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b