Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 8 டிசம்பர் (ஹி.ச.)
பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரியதாக போற்றப்படும் காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில் சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் 29 கோடி ரூபாய் செலவில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது இந்த பணிகள் முடிவடைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று (டிச 08) கோலாகலமாக நடைபெற்றது. இன்று அதிகாலை 5.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் சன்னதி கோபுரங்களுக்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவாய நம என பக்தர்கள் கோஷம் எழுப்பினர். காலை 6.30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரம், ரிஷிகோபுரம் உள்பட கோபுரங்கள் அனைத்தும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவிலில் மூலவர் நுழைவுவாயில் முன்பாக வண்ண வண்ண பூக்களால் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தமிழகம் முழுவதும் இருந்து வந்த 40-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பக்க இசைக்கருவிகளுடன் திருமுறை பாராயணம் பாடினர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட போலீசார் காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பி சண்முகம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b