Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 8 டிசம்பர் (ஹி.ச.)
விமான நிறுவனங்களுக்குச் சர்வதேச சிவில் விமான அமைப்பு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தன்னுடைய விதிகளைச் சமீபத்தில் புதுப்பித்தது.
அதில் விமானிகளின் நலன்களையும் பயணிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, விமானிகளுக்கான பணி நேரத்தைக் குறைத்தது. அதோடு, அவர்களுக்கான ஓய்வு நேரத்தையும் அதிகரிக்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த விதிமுறைகள் மாற்றம் காரணமாக இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதன் காரணமாகக் கடந்த சில நாட்களாக பல்வேறு இண்டிகோ பயணிகள் விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விமானிகள் பற்றாக்குறையால் சென்னை விமான நிலையத்தில் 7வது நாளாக இன்றும் (டிச 08) இண்டிகோ விமானச் சேவையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராஜ்ய சபாவில் இன்று
(டிச 08)எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு பதில் அளித்தார்.
அவர் தனது உரையில் கூறியதாவது,
இந்த குளறுபடிகளுக்கு இண்டிகோ நிறுவன விமானிகள், அதன் பணியாளர்களின் அட்டவணை, உள் திட்டமிடல் போன்றவற்றில் ஏற்பட்ட குளறுபடிகளே காரணம் ஆகும். பணி நேர கட்டுப்பாட்டு விதிகள் தொடர்பாக தெளிவு பெற, இண்டிகோ நிறுவனத்துடன் நடைபெற்ற ஆலோசனையின் போது அந்த நிறுவனம் எவ்வித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.
எல்லாம் சாதாரணமாகவே இயங்கி கொண்டு இருந்தது. திடீரென டிச.3ம் தேதி இந்த பிரச்னையை நாங்கள் கவனித்தோம். மத்திய அமைச்சகம் உடனடியாக தலைவிட்டது. நிலைமையை கட்டுப்படுத்தினோம்.
விமான புறப்பாடில் தாமதங்கள், ரத்து போன்றவற்றால் பாதிக்கப்படும் பயணிகளை பாதுகாக்க கடுமையான விமான போக்குவரத்து விதிகள் நடைமுறையில் உள்ளன. விமான நிறுவனங்கள் இதை பின்பற்ற வேண்டும்.
மென்பொருள் பிரச்னை பற்றி, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள விமான போக்குவரத்து துறை உலகளாவிய தர நிலைகள் கொண்டிருக்க வேண்டும் என்பதே அரசின் தொலைநோக்கு பார்வையாகும்.
இண்டிகோவில் உள்ள சிக்கல்கள், பணியாளர்கள் பட்டியல் மற்றும் செயல்பாடுகளை திட்டமிடுதல் தொடர்பானவை ஆகும். இவற்றை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் அன்றாடம் நிர்வகிக்கும் பொறுப்பை கொண்டுள்ளன.
விமானிகளுக்கான புதிய நேர கட்டுப்பாட்டு விதிகளை எந்தவொரு நிறுவனமும் பின்பற்ற வில்லை என்றால் கடுமையான நடவடிக்கையை எடுப்போம், இதில் சமரசம் கிடையாது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.569 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதிய உள்ளுர் விமான கட்டண விகிதங்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இவ்வாறு மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறினார்.
Hindusthan Samachar / vidya.b