Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 8 டிசம்பர் (ஹி.ச)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் இன்று(டிச 8) நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பழனி மலைக்கோயில் உற்சவர் சன்னதியில் ரூ.4 கோடி மதிப்பில் வெள்ளி தகடு பதிக்கும் பணி மற்றும் கோயில் கோபுரங்களுக்கு ஒளி விளக்குகளை தொடங்கி வைத்துள்ளோம்.
பழனி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 6,500 மாணவர்களுக்கு புத்தக பையுடன் கூடிய கல்வி உபகரணங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கலை, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற 60 பேருக்கு பரிசளிப்பு விழா நடத்தியுள்ளோம்.
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக கல்லூரிகளில் மதிய உணவு திட்டம் கொண்டு வந்த பெருமை முதல்வர் மு.க.ஸ்டாலினை சாரும். தொடர்ந்து காலை சிற்றுண்டி திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளோம். உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு இரவு உணவு திட்டத்தையும் தொடக்கி வைத்துள்ளோம். அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை அடுக்கிக்கொண்டே போவதால்தான் அற்பமனம் கொண்டோர் எப்படியாவது ஆன்மீகத்திற்கும், இறையன்பர்களுக்கும், இந்த ஆட்சிக்கும் இடைவௌி உண்டாக்க நினைக்கிறார்கள். அது நடக்காது. திராவிட மாடல் ஆட்சி உறுதியுடன் நடைபெற்று வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்தோடு, அனைத்து மதத்தினரையும் ஒன்றாக பாவித்து செயல்படுகிறோம். அவரவர் விரும்புகின்ற வழிபாட்டை சுதந்திரமாக மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b