Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 8 டிசம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநர் அலுவலகம் என்ஜிஓ காலனி பகுதியில் அமைந்துள்ளது. இங்கு, துணை இயக்குநராக சரவண பாபு என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 18 ஆம் தேதி தீயணைப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, துணை இயக்குநர் சரவண பாபு மற்றும் அவரது உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அலுவலகத்திற்கு எதிரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்ற அதே நாளில், நள்ளிரவில் அங்கு பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர், ஒரு பையைக் கொண்டுவந்து அலுவலகத்திற்குள் வைத்துவிட்டு சென்றது பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து துணை இயக்குநர் சரவணபாபு மாநகர காவல் ஆணையரிடம் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக, தூத்துக்குடியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஆனந்த் மற்றும் அவரது உறவினர் முத்துச்சுடர் என்பவரை கைது செய்து விசாரணை நடைபெற்றது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
விசாரணைக்கு பிறகு போலீசார் கூறுகையில், துணை இயக்குநர் சரவணபாபுவை பிடிக்காத சில உயரதிகாரிகள், அவரை குற்ற வழக்கில் சிக்க வைக்க பல நாட்களாக திட்டமிட்டுள்ளனர்.
பணியில் அவர் பொறுப்புடன் செயல்பட்டு வந்ததால் அவரை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்க வைக்க வேண்டுமென திட்டமிட்டுள்ளனர். அதற்கான பொறுப்பு ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜய் (30) என்பவரை தொடர்பு கொண்டு அலுவலகத்தில் பணம் வைத்தால், அதற்காக பணம் தருவதாக பேசியுள்ளனர். திட்டமிட்டபடி விஜய் அலுவலகத்தில் பணத்தை வைத்துள்ளார்.
தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டிய நிலையில், விஜய் வெளி மாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், அவர் மும்பை தாராவில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையிலான தனிப்படை போலீசார், மும்பைக்கு விரைந்து தாராவில் பதுங்கி இருந்த விஜயை கைது செய்து இரவு நெல்லை பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இதில் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் சரவணபாபு அலுவலகத்தில் பணம் வைத்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? இதுபோன்று வேறு ஏதேனும் சம்பவம் நடந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN