Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 8 டிசம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் 49 உபகோயில்கள் உள்ளன. இதில் சன்னதி வீதியில் அமைந்துள்ள திருஆவினன்குடி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. நக்கீரர் மற்றும் அருணகிரிநாதரால் 3ம் படை வீடு என வர்ணிக்கப்பட்டது.
இங்குதான் பழனியில் நடைபெறும் முதன்மை திருவிழாவான பங்குனி உத்திரத்திற்கு கொடியேற்றம், திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறும். பழனிக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலோர் முதலில் திரு ஆவினன்குடி கோயிலில் குழந்தை வேலாயுதசுவாமியை தரிசித்த பிறகே மலைக்கோயிலுக்கு சென்று நவபாஷாண முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம்.
திருஆவினன்குடி கோயிலில் கடந்த 2014ம் ஆண்டு செப்.7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், 12வது ஆண்டையொட்டி கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, கோயிலில் சீரமைப்பு பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது.
இன்று(டிச 08) காலை கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை 5.45 மணியளவில் யாக சாலையில் இருந்து திருக்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. காலை 6.30 மணிக்கு பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க மூலவர் விமானம் மற்றும் ராஜகோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
தொடர்ந்து பரிவார தெய்வங்களின் சன்னதி கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
பின்னர், மூலவருக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, அர.சக்கரபாணி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b