Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.)
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடம் ஒன்றாகும்.
இத்தடத்தில் ஒரு பகுதியான, பூந்தமல்லி - போரூர் சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையம் வரை 10 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. அதன்படி, ரயில் தண்டவாளம் அமைத்து, ஓட்டுநர் இல்லாத ரயில்களின் சோதனை ஓட்டமும் நடைபெற்று வந்தது.
இத்தடத்தில் மெட்ரோ ரயில் மற்றும் வழித்தடத்துக்கு பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனையை இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு (ஆர்.டி.எஸ்.ஒ.) ஆக.16-ம் தேதிமுதல் ஒரு வாரத்துக்கு மேல் நடத்தியது.
அப்போது, மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்பட்டது. அத்துடன், வழித்தடத்தில் ரயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல்திறன் பற்றிய விரிவான சரிபார்ப்பும் செய்யப்பட்டது.
இதன்பிறகு, பாதுகாப்பு சான்றிதழ் விரைவில் கிடைத்து விடும் என்றும், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை மெட்ரோ ரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கான பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கவில்லை.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயரதிகாரிகள் கூறியதாவது:
இப்பாதையில் கடந்த ஆகஸ்டில் இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பினர் சோதனை நடத்தினர்.
இக்குழுவினர், ரயில்வே வாரியத்துக்கு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு ஒப்புதல் அளித்து, பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் தர வேண்டும். ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பிறகே, பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வந்து, இப்பாதையில் சோதனை ஓட்டம் உட்பட பல்வேறு சோதனைகளை நடத்தி ஆய்வு செய்வார்.
ஏதாவது திருத்தம் இருந்தால், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவிப்பார். இல்லைஎனில், இப்பாதையில் ரயில் இயக்கலாம் என்று அறிக்கை சமர்ப்பிப்பார். இச்செயல்முறைகள் முடிந்து, விரைவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது, இப்பாதையில் 95 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. ஓரிரு இடங்களில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இப்பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை இயக்க தயாராக இருக்கிறோம். இதற்காக நாங்கள் ரயில்வே வாரியத்துடனும் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்துடனும் பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b