Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 8 டிசம்பர் (ஹி.ச.)
புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்த மூன்று தொழிற்சாலைகள் மற்றும் 10 குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிமையாளர் ராஜா என்ற வள்ளியப்பன் உள்ளிட்ட 10 பேரை சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் போலி மருந்துகளின் விவகாரத்தில் மக்களின் உயிரோடு விடியாடிய குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊர்வலம் - சட்டமன்ற முற்றுகை போராட்டம் இன்று (டிச 08) நடத்துவதாக திமுக அறிவித்தது.
அதன்படி இன்று புதுவை காமராஜர் சதுக்கத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு திமுக மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார். அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் நேரு வீதி வழியாக சட்டப்பேரவை நோக்கி சென்றது.
ஊர்வலத்தில் வந்தவர்கள் போலி மருந்து விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தியும், கோஷம் எழுப்பியும் சென்றனர். அவர்களை சம்பா கோயில் எதிரில் போலீஸார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர்.
தொடர்ந்து போலீஸாரின் தடுப்புகளை மீறி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.
போராட்டத்தின் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநில அமைப்பாளர் சிவா கூறியதாவது:
புதுச்சேரி அரசு போலி மருந்து தயாரிப்பாளர்களை, பதுக்கியவர்களை, ஏஜெண்டாக இருந்தவர்களையும் காப்பாற்றி வருகிறது என மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ரூ.1000 கோடி-க்கும் மேல் போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அரசு பெயர் அளவுக்கு கைது நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் முக்கியக் குற்றவாளிக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பணம் கைமாறியுள்ளது. பல அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது. இந்த மருந்து இந்தியாவில் எந்தக் கடைகளுக்கு சென்றுள்ளது, இதனை பயன்படுத்தி யாரேனும் உயிரிழந்துள்ளார்களா என்பது தெரியவில்லை?. இதுகுறித்து ஆய்வு நடத்த அரசு மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்கவில்லை.
அதனால் சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும். போலி மருந்து தயாரிப்பில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது. மருந்து குடோன்கள் இருந்த இடம் இக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு உரிமையானது. இதற்கு பல மடங்கு வாடகை அளித்துள்ளனர்.
பல அரசியல்வாதிகளுக்கு வீடு உட்பட பல சலுகைகள் வழங்கியுள்ளனர். இதுவரை 10 ஆண்டுகளாக நிறுவனம் எப்படி நடந்தது? யாருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது? மருந்துகளை சாப்பிட்டு இறந்தவர்கள் எத்தனை பேர்?. என அரசு அறிக்கை வெளியிட வேண்டும். புதுச்சேரியில் போலி மருந்துகள் விற்கப்பட்டு ஏழை மக்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி இதுவரை ஆய்வுக் கூட்டம் கூட நடத்தவில்லை. முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் என தனித்தனி பாதையில் பயணிக்கின்றனர்.
புதுச்சேரி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b