Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 8 டிசம்பர் (ஹி.ச.)
நாடாளுமன்ற மக்களவையில் இன்று(டிச 08) காலை கேள்வி நேரம் தொடங்கியதும், திமுக உறுப்பினர் அருண் நேரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வரும் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.
டாலருக்கு நிகரான ரூபாயின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதைத் தடுக்க, சரியாக நிர்வகிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது? என்று அருண் நேரு கேள்வி எழுப்பினார்.
அருண் நேருவின் கேள்விக்குப் பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில் டாலரோடு ஒப்பிடும்போது சந்தை மதிப்பில் ரூபாய் வீழ்ச்சி அடைந்திருக்கலாம். இவ்விஷயத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு இதில் தலையிட முடியாது. சிறப்பு நேரங்களில் இந்திய ரிசர்வ் வங்கி இதை கண்காணித்து வருகிறது என்று தெரிவித்தார்.
இந்திய இளைஞர் சக்தியை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த அரசு எத்தகைய திட்டங்களை கொண்டிருக்கிறது என்ற மலப்புரம் எம்.பி.யின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய இளைஞர் நலன் மற்றும் விளைாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறுகையில்,
நமது நாட்டின் மக்கள் தொகையில் 65% பேர் 30 வயதுக்கு குறைவானவர்களாக இருக்கிறார்கள். மக்கள் தொகை நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கிறது. அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சாராத ஒரு லட்சம் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார். அவர்கள் அரசியலிலும் ஈடுபடலாம் என பிரதமர் சொல்லி இருக்கிறார்.
என்எஸ்எஸ், என்சிசி உள்ளிட்டவற்றில் 2 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் நாட்டை புரிந்து கொள்வதற்காக பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கே தங்கி அவர்கள் அந்தந்த பகுதிகளின் கலை, கலாச்சாரம், மக்களின் வாழ்க்கை முறை குறித்து அறிந்து கொள்கிறார்கள். இளைஞர்களுக்காக பல இடங்களில் வினாடி வினா போட்டிகளும் நடத்தப்படுகின்றன, என்று தெரிவித்தார்.
டோக்ரி மொழியை வளர்க்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தார் கூறுகையில்,
தாய்மொழி வளர்ச்சிக்காக புதிய கல்விக் கொள்கையின் கீழ் பல்வேறு புதிய அம்சங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஆரம்பக் கல்விக்கான புத்தகங்கள் என்சிஇஆர்டி மூலம் பதிப்பிக்கப்பட்டுள்ளன. 22 பட்டியல் மொழிகளிலும் இந்த பாடத்திட்டங்கள் உள்ளன. அதோடு, பிரத்யேகமாக தொலைக்காட்சி சேனலும் நடத்தப்படுகிறது.
ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த வசதிகள் உள்ளன.
இதை எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்க இருக்கிறோம். பயிற்சி மொழி என்பது நிச்சயமாக உள்ளூர் மொழியாக, தாய் மொழியாகத்தான் இருக்க வேண்டும். இதில் அக்கறை காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b