Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் நவீன மாடுகள் காப்பகங்களை பராமரிக்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் மாநகராட்சி ஆணையரிடம் விருப்பக் கடிதம் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 22,875 மாடுகள், அவற்றின் உரிமையாளர்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் பெரும்பாலான மாடுகள் உரிய இடவசதி இன்றி, தொழுவங்களுக்குள் வைத்து பராமரிக்கப்படாமல் சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரிந்து போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் பொது சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றன. சில நேரங்களில் பொதுமக்கள் மாடுகளால் தாக்கப்படும் சம்பவங்களும் நடக்கின்றன.
ரூ.10 ஆயிரம் அபராதம்: இப்படி சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு மாடு பிடிக்கும் வாகனம் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா 5 மாடு பிடிக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிடிக்கப்படும் மாடுகள் புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவத்தில் அடைக்கப்பட்டு, மாடு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அதன் உரிமையாளர்களிடம் இருந்து அபராதமாக வசூலிக்கப்படுகிறது.
மீண்டும் சாலைகளில் விடக்கூடாது என்ற நிபந்தனையுடன் அந்த மாடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 முதல் 2025 வரை மொத்தம் 16,692 சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.4.43 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாட்டின் உரிமையாளர்கள், மாடு வளர்ப்போர் சங்க நிர்வாகிகள் கோரிக்கைப்படி, சென்னையில் 17 இடங்களில் நவீன மாடுகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் திருவொற்றியூர், மாதவரம், ராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் நவீன மாடுகள் காப்பகங்களில் 710 மாடுகள் அவற்றின் உரிமையாளர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், 13 இடங்களில் சுமார் 1,100 மாடுகளை பரமாரிக்கும் வகையில் காப்பகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
புரிந்துணர்வு ஒப்பந்தம்: இத்திட்டத்தில் பேசின் பாலம் சாலையில் உள்ள 550 மாடுகளை பரமரிக்கும் திறன் கொண்ட காப்பகத்தில் உள்ள மாடுகளுக்கு தீவனம் வழங்கி பராமரிப்பதற்கு சேவை மனப்பான்மை உள்ள தன்னார்வலர் குழுவிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்த சேவை மற்ற காப்பகங்களுக்கும் விரிவாக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள், விருப்ப கடிதத்தை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b