Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 8 டிசம்பர் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படைவீடாகத் திகழ்கிறது. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம். இக்கோவிலுக்கு விடுமுறை நாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
அவ்வாறு சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற ராஜகோபுரம் எதிரே உள்ள மாட வீதியில் அகல் விளக்கு மற்றும் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.
அந்த வகையில் , இன்று
(டிச 08) காலை அகல் விளக்குகளில் பெண் பக்தர்கள் தீபம் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்தப் பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதையடுத்து, அங்கு பணியில் இருந்த கோயில் ஊழியர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்பாக நடந்த இந்த சம்பவத்தால் திருத்தணியில் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / vidya.b