Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.)
முதல்வர் ஸ்டாலின் இன்று
(டிச 08) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 98 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம் மற்றும் புதிய மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் 60 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பெரியநாயகி தெரு மீனவ கிராமத்தில் 26 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவுடன் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம், தென்காசி மாவட்டம், கடானா கிராமத்தில் 2 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரசு மீன் விதைப் பண்ணை; மொத்தம் 98 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் 4 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் ந.கௌதமன், தமிழ்நாடு மீனவர் நல வாரியத் தலைவர் முனைவர் அ. ஜோசப் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் திரு.கே.வி.முரளிதரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திறந்து வைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம் மற்றும் புதிய மீன் விதைப்பண்ணை பற்றிய விவரங்கள் :
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் 375 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள படகு அணையும் தளம், 110 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள படகு அணையும் சுவர், மீன் ஏலக்கூடம், மீன் பதப்படுத்தும் கூடம், குளிர் பதன கூடம், வாய்க்கால் பாலம் மற்றும் சாலை ஆகிய கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டதால் 68,300 மீனவர்கள் பயன்பெறுவர் மற்றும் 850 விசைப்படகுகள், 4,800 நாட்டு படகுகள் பாதுகாப்பாக நிறுத்த இயலும்.
கன்னியாகுமரி மாவட்டம், பெரியநாயகி தெரு மீன் இறங்குதளத்தில் 235 மீட்டர் நீளத்திற்கு நீட்டப்பட்டுள்ள தூண்டில் வளைவு மற்றும் வலை பின்னும் கூடம் ஆகிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டதால் 13,021 மீனவர்கள் பயன்பெறுவர் மற்றும் 235 இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள், 06 நாட்டு படகுகள் பாதுகாப்பாக நிறுத்த இயலும்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் 350 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள படகு அணையும் சுவர், கூடுதல் மீன் ஏலக் கூடம், கூடுதல் வலைப் பின்னும் கூடம், மீன் உலர்தளம், சாலை ஆகிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டதால் 6,073 மீனவர்கள் பயன்பெறுவர் மற்றும் 45 விசைப் படகுகள், 310 கண்ணாடி நாரிழை படகுகள் பாதுகாப்பாக நிறுத்த இயலும்.
தென்காசி மாவட்டம், கடானா அரசு மீன் விதைப் பண்ணையில் மீன் வளர்ப்பு தொட்டிகள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டதால் வருடத்திற்கு 5 இலட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து உள்நாட்டு மீன்வளத்தை உயர்த்த இயலும் என தமிழக அரசு கூறியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b