தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் - டிடிவி தினகரன் கோரிக்கை
சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.) பி.எட் மாணவர்களுக்கான ஸ்வயம் எழுதும் தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையங்களை உடனடியாக ஒதுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது க
தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் - டிடிவி தினகரன் கோரிக்கை


சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.)

பி.எட் மாணவர்களுக்கான ஸ்வயம் எழுதும் தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையங்களை உடனடியாக ஒதுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று (டிச 08) பதிவிட்டிருப்பதாவது,

ஸ்வயம் (Swayam) தேர்வை எதிர்கொள்ளும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு – தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களையே ஒதுக்கீடு செய்வதை தேசிய தேர்வு முகமை உறுதி செய்திட வேண்டும்.

டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பி.எட் மாணவர்களுக்கான ஸ்வயம் (Swayam) தேர்வு நடைபெற உள்ள நிலையில்,அத்தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் அதிகமான மாணவர்கள் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுத்த நிலையிலும், கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது அம்மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த ஸ்வயம் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கான சான்றிதழ்களைப் பல்கலைக்கழகங்களின் மூலம் பெறமுடியும் என்ற சூழலில், அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது அவர்களைப் பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது உளவியல் ரீதியிலும் மிகுந்த உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையங்களை உடனடியாக ஒதுக்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என தேசிய தேர்வு முகமையையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b